ஜீவ ஆவி!

"கிறிஸ்து இயேசுவினாலே, ஜீவனுடைய ஆவியின் பிரமாணம், என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே" (ரோம. 8:2).

  மனிதனோடு இடைபடுகிற கர்த்தருடைய ஆவி, "ஜீவ ஆவி" என்று அழைக்கப் படுகிறது. மனிதன் பூமியிலே வாழுவதற்கு இந்த ஜீவ ஆவிதான், அவனுக்குள்ளே பரலோக ஜீவனைக் கொண்டு வந்தது. இந்த ஜீவ ஆவியின் மூலமாக, பூமியிலே ஜீவனுள்ள யாவும் சிருஷ்டிக்கப்பட்டன. "தேவனாகிய கர்த்தர், மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான்" (ஆதி. 2:7).

  இன்றைக்கு உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கிற சுவாசமும், இருதயத் துடிப்பும், கர்த்தரிடத்திலிருந்து வந்தவை. ஆதாமுக்குக் கொடுத்த ஜீவ சுவாசம், இன்று ஆறாயிரம் ஆண்டுகளான பிறகும்கூட, மனிதருக்குள் கிரியை செய்துகொண்டே இருக்கிறது. அந்த ஜீவ சுவாசத்துக்காக, கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.

  இயேசு கிறிஸ்துவைக் குறித்து, வேதம் சொல்லுகிறது என்ன?  "நான் ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (யோவா.10:10) என்றார். வியாதி நேரங்களில், உங்களுக்கு சுகமும், ஆரோக்கியமும் தந்து, பாதுகாக்கிறவர் அவர்தான். பெலவீன நேரத்திலே உங்களை பெலத்தினால் நிரப்பி, உயிர் போகும் தருணங்களிலே, ஒருவருக்காக ஜெபிக்கும்போது, கர்த்தர் மன மிரங்கி, ஆயுசை நீடித்துக் கொடுக்கிறவரும் அவரே.

  கர்த்தர் சுவாசமும், இருதயத் துடிப்புமாகிய ஜீவனை உங்களுக்குள் தருகிறார். ஜீவனுள்ள ஆவியின் பிரமாணம், உங்களை பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று, விடுதலையாக்குகிறது. அந்த ஜீவன் பரிபூரணப்பட, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இந்த பூமிக்கு வந்தார். யோபு பக்தன் சொன்னார், "எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர். உம்முடைய பராமரிப்பு, என் ஆவியைக் காப்பாற்றினது" (யோபு 10:12).

  ஒருமுறை, மரித்துக் கொண்டிருக்கிற ஒருவனுக்காக ஜெபிக்கும்படி, ஸ்மித் விகிள்ஸ் வொர்த் என்ற பக்தனை அழைத்துக்கொண்டு வந்தார்கள். அவனோ, தன்னறி வற்றவனாய், மரணத்தின் கோர பிடியில் சிக்கியிருந்தான். அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவனுக்கு இயேசுவைப் பற்றி சொல்லி, விசுவாசத்தை உண்டு பண்ண வேண்டுமென்று, அவர் விரும்பியும் முடியாதிருந்தது.

  ஆகவே, அந்த போதகர், அவன் காதின் அருகிலே போய்,"இயேசு கிறிஸ்து, இயேசு கிறிஸ்து" என்று, சொல்லிக் கொண்டேயிருந்தார். பின்பு, "ஜீவனுண்டாவதாக" என்று கட்டளையிடுகிறேன் என்றார். அவர் சொல்ல சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாய், அவனுக்குள் ஜீவன் வந்தது. பிறகு, அவனும், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, "எனக்கு ஜீவனுண்டாயிருப்பதாக" என்று வேண்டிக் கொண்டான். ஒரு சில விநாடி நேரத்திற்குள்ளாக, அவனுக்குள் அந்த ஜீவன் பரிபூரணமாய் வந்ததினால், அவன் எழுந்து உட்கார்ந்தான்.

  ரோமர் 7-ம் அதிகாரத்தில், அப். பவுலுக்கு ஒரு பக்கம், ஆவியின் பிரமாணம் இருந்தது. மறுபக்கத்தில், பாவ பிரமாணம் அவரது மாம்சத்தில் கிரியை செய்தது. நன்மை செய்ய வேண்டுமென்று விரும்பியும், அவரால் செய்ய முடியவில்லை. "ஐயோ! நிர்பந்தமான மனுஷன் நான்," என்று கதறினார். அப்பொழுதுதான், "ஜீவனுள்ள தேவனுடைய ஆவியின் பிரமாணம்," அவரை விடுதலையாக்க முடியும் என்பதை அறிந்துகொண்டார்.

நினைவிற்கு:- "மாம்சசிந்தை மரணம். ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்" (ரோம. 8:6).