மேன்மைப்படுத்துவேன்!

"இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்" (யோசுவா 3:7).

கர்த்தர் இன்று வாக்குத்தத்தமாக உங்களிடம், "நான் உன்னை உயர்த்துவேன், மேன்மைப்படுத்துவேன், மகிமைப்படுத்துவேன்," என்று அன்போடு சொல்லு கிறார். உலகம், உங்களை தாழ்த்த முற்படலாம். உங்களுடைய பெயரை, கெடுக்க சதி செய்யலாம். நீங்கள் எப்பொழுது விழுவீர்களென்று காத்துக் கொண்டிருக்கலாம்.


ஆனால் கர்த்தரோ, அன்புள்ள தகப்பனாயிருந்து, பிள்ளைகளின் மேன்மையை எதிர்பார்த்து, உங்களை மேன்மைப்படுத்துவார். கர்த்தர், யோசுவாவை நோக்கி: "நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன்" என்று சொன்னதை, எல்லோரும் அறியும்படி செய்தவர், இன்று அவர், அவர்கள் கண்களுக்கு முன்பாக, "உங்களை மேன்மைப்படுத்துவேன்" என்று சொல்லுகிறார்.


பல ஆண்டுகளுக்கு முன்பாக, நானும், இன்னொரு ஊழியக்காரரும் சேலம் என்ற இடத்தில் பிரசங்கிக்கப் போயிருந்தோம். நான் பேசின பிறகு, கடைசியாக அவர் பேசும்படியாக விருப்பம் கொண்டார். நானும் சம்மதித்தேன். அவர் பேசும்போது, என்னை மிகவும் தரம் கெட்ட விதத்தில் தாழ்த்தி, மனம் மடிவடையச் செய்யும்படி, பிரசங்கித்தார். எல்லோர் முன்பும் அப்படி அவர் பேசினதினால், என் மனம் உடைந்தது. அதன்பின் ஜனங்கள் ஜெபிக்க வந்தபோது, கர்த்தர் என் மூலமாய் பலத்த அற்புதங்களைச் செய்தார். பிசாசுகள் அலறி ஓடினது. வியாதியஸ்தர்கள் அற்புதமாய் சுகம் பெற்றார்கள், விடுதலையாக்கப்பட்டார்கள்.


ஆனால், அடுத்த ஊழியக்காரர் மூலமாய், எந்த ஒரு அற்புதமும் நடைபெற வில்லை. அவர் தொண்டையும் கெட்டுபோய் விட்டது. ஜெபிக்க முடியாதபடி திணறினார். அப்பொழுது, கர்த்தர் என் பட்சத்தில் நிற்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். எனக்காக வழக்காடி, அவர் யுத்தம்பண்ணினார். மட்டுமல்ல, அந்த சபையாருக்கு முன்பாக, என்னை மேன்மைப்படுத்தினார்.
தேவபிள்ளைகளே, மற்றவர்கள் அநியாயமாய் உங்களை குற்றஞ்சாட்டுகிற படியால் இன்று நீங்கள் உடைக்கப்பட்டு, நொறுங்குண்டு போயிருந்திருக்கலாம். ஆனால் உங்களை மேன்மைப்படுத்தும்படி, கர்த்தர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். யோசுவாவைக் குறித்து தொடர்ந்து நாம் வாசிக்கும்போது, கர்த்தர் யோசுவாவை சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும், மேன்மைப்படுத்தினார். அவர்கள் மோசேக்கு பயந்திருந்ததுபோல யோசுவாவுக்கும், அவர் உயிரோடிருந்த நாளெல் லாம் பயந்திருந்தார்கள்.


சிலர், தங்களைத் தாங்களே உயர்த்தி, மேன்மையடைய விரும்புகிறார்கள். அநேக ஜனங்களுக்கு பணம் கொடுத்தாவது, தங்களை புகழ வைக்கிறார்கள். இந்த  மேன்மையெல்லாம், காலப்போக்கிலே அழிந்துபோகும். "ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு. எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்" (1 நாளா. 29:12).


ஒரு மனுஷன், இன்னொருவனை உயர்த்தலாம். ஆனால், உயர்த்துகிறவனே கீழே தொப்பென்று போட்டு, காலால் மிதித்துவிடுவான். இதுதான், மனிதனுடைய இயற்கை. ஆனால், கர்த்தர் உங்களை உயர்த்தும்போது, அது நிரந்தரமானது. ஆச்சரியமும் அதிசயமுமானது.


நினைவிற்கு:- "உன்னை அறியாதிருந்த ஜாதி, உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்" (ஏசா. 55:5).