நூறு மடங்கு!

"ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்" (ஆதி. 26:12).


இந்த வாக்குத்தத்தத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்வீர்களென்றால், கர்த்தர் பூரணமாக, நூற்றுக்கு நூறு உங்களை ஆசீர்வதிப்பார். உங்களுடைய கையின் பிரயாசங்களிலும், செயல்களிலும் நூறு மடங்கு பலனைப் பெறுவீர்கள். ஆகவே, நீங்கள் நிறைவாக, சம்பூரணமாக பலனைப் பெறுவீர்கள்.


இயேசு கிறிஸ்து, விதைக்கிறவனுடைய உவமையைக் குறித்து, மத். 13-ம் அதிகாரத்தில் பேசினார். ‘வழியருகே விழுந்த விதைகளை பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டதினால், எந்தப் பலனும் கொடுக்கவில்லை. சில விதைகள் மண்ணில்லாத, கற்பாறையிடங்களில் விழுந்ததினால், வெயிலினால் கருகிப் போனது. அவையும், எந்தப் பலனும் கொடுக்கவில்லை. ஆனால், சில விதைகள் மிகவும் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றில் சிலது முப்பதாயும், சிலது அறுபதாயும், சிலது நூறாகவும் பலன் தந்தன.


ஒரு உயர்நிலைப்பள்ளியில், ஒரு வருடம் நான் கணித ஆசிரியராய் பணியாற்றி னேன். ஒரே மாதிரியாக மாணவர்களுக்குப் போதித்தாலும், சிலர் தோல்வியடை வார்கள். சிலர் முப்பது மார்க்குகளும், சிலர் அறுபது மார்க்குகளும், வேறு சிலர் நூற்றுக்கு நூறும் பெறுவார்கள். அது அவர்கள் கவனிக்கிறதையும், விளங்கிக்கொள்ளுகிறதையும், அதிக மார்க்கு எடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் பொறுத்து இருக்கிறதைக் கண்டேன்.


ஏன் இந்த உவமையானது, பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களைப் பற்றிய தாகும், என்று இயேசு சொன்னார்? (மத். 13:11). ஆம், பரலோக ராஜ்யத்தில் மூன்று பகுதிகளிருக்கின்றன. முதலாவது, புதிய வானம். அது முப்பது சதவிகிதம் பலனைப் பெறுகிறவர்களைக் குறிக்கிறது. இரண்டாவது, புதிய பூமி. அது அறுபது சதவிகிதம் பலனைக் குறிக்கிறது. புதிய எருசலேம். அது நூற்றுக்கு நூறு பூரணமாய் கர்த்தருக்கு ஒப்புவித்த பரிசுத்தவான்களைக் குறிக்கிறது (வெளி. 21:1,2).


நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில், கர்த்தருக்கு முப்பது சதவிகித நேரத்தை மட்டுமே கொடுத்திருந்தால், பரலோக ராஜ்யத்திலுள்ள புதிய வானத்திற்கு வருவீர்கள். உங்கள் நேரத்தில், அறுபது சதவிகிதம் கர்த்தருக்கென்று கொடுத்து அவருக்காக வாழ்ந்தால், புதிய பூமிக்கு வருவீர்கள். ஆனால், சில பரிசுத்தவான்கள் ஏனோக்கைப் போல, நூற்றுக்குநூறு கர்த்தருக்கென்று தங்களை ஒப்புக்கொடுத்து, கர்த்தரோடு  நடந்து ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் பூரணமடைந்து, புதிய எருசலேமிலே தேவனோடு நடப்பார்கள்.


ஈசாக்கு, தியானப் புருஷன். மாலை வேளைகளிலே, கர்த்தரை தியானிக்க வயல்வெளிக்குப் போகிறவர். பலவிதங்களிலே, ஈசாக்கின் வாழ்க்கை கிறிஸ்துவுக்கு ஒப்பாக கூறப்பட்டிருக்கிறது. சொந்த தகப்பனால், அடிக்கப்பட கொண்டு போகப் படுகிற ஆட்டுக்குட்டியைப்போல, வாய் திறவாமல் மோரியா மலைக்குச் சென்றார். அவர் ஒரு பூரண புருஷனாயிருந்தபடியால், அவர் விதைத்த விதை முப்பதாக அல்ல, அறுபதாக அல்ல, நூற்றுக்கு நூறு பூரணமாக பலன் கொடுத்தது.


இயேசு கிறிஸ்து சொன்னார், "ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்" (மத். 5:48). தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகை நெருங்கி வருகிறது. பூரணராகும்படி கடந்துபோவோமாக (எபி. 6:2).


நினைவிற்கு:- "ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது" (சங். 45:13).