ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்!

"என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்" (மத்.25:34).

கர்த்தர் உங்களை எவ்வளவு அன்போடுகூட அழைக்கிறார் என்பதை, சற்று சிந்தித்துப் பாருங்கள். "பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே!" என்று, அவர் உங்களைக் கூப்பிடும்போது, உங்களுடைய உள்ளமெல்லாம் மகிழ்ந்து களிகூரும். உங்களுடைய அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வெறுமையாய், இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதற்காக மாத்திரம் அழைக்கப்படவில்லை. நித்தியமான ராஜ்யத்திற்கென்று அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை, மறந்து போய்விடக் கூடாது. அந்த ராஜ்யத்தை, கர்த்தர் உங்களுக்காகவே உலகம் உண்டானது முதல் ஆயத்தம்பண்ணியிருக்கிறார். ஆகவே தான் அப். பவுல், "அழைப்பின் மகிமையை" சிந்தித்து தியானித்துப் பார்த்துவிட்டு, "நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று குறிப்பிடுகிறார் (எபே. 4:1-3).

உங்களுடைய காதுகளில், கர்த்தருடைய அழைப்பின் சத்தம் தொனித்துக் கொண்டே இருக்கட்டும். தேவனுடைய காருண்யத்தை, நீங்கள் தியானித்துக் கொண்டேயிருங்கள். அவருடைய அழைப்பின் குரல், உங்களுடைய உள்ளத்திலும் தொனித்துக் கொண்டே இருக்கட்டும். நீங்கள், எப்படியாவது அந்தப் பரலோக பாக்கியத்திற்குப் பாத்திரவான்களா காணப்பட வேண்டும்.

தேவபிள்ளைகளே, இந்த உலகத்தில் நீங்கள் செலவழிக்கிற நாட்கள், மிக வேகமாக கடந்து போகும். அது ஒருவேளை எழுபதோ, அல்லது எண்பதோ ஆண்டுகளானாலும்கூட, அது புல்லின் பூவைப் போல உதிர்ந்து போகும். ஆனால், நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் வாழும் நாட்களோ நித்திய நித்தியமானது. அந்த ராஜ்யத்தில் பிரவேசிக்கவும், கர்த்தர் அழைத்த அழைப்பில் நிலைநிற்கவும் உங்களை ஒப்புக்கொடுங்கள்.

அதற்காக எந்தப் பாடுகளையும் சகிக்க, நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும். உபத்திரவங்களின் வழியாகவும், நிந்தைகளின் வழியாகவும் கடந்து செல்லும் போது, உங்களுடைய கண்கள் எப்போதும் அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தையே, நோக்கி கொண்டு இருக்கட்டும். "நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது" (2 தெச. 1:5).

நமது அருமை ஆண்டவரின் முன்மாதிரியை நோக்கிப் பாருங்கள். அவர் பூமியில் வாழ்ந்தாலும், "தான் இந்த உலகத்தான் அல்ல" என்பதைக் குறித்து, அவர் திட்டமான வெளிப்பாடு உடையவராயிருந்து, அதை தெளிவாக குறிப்பிட்டார். ஆகவே, நீங்களும் பயபக்தியோடுகூட, அவருடைய அடிச்சுவடுகளைப் பின் பற்றுவீர்களா? உங்களுடைய கண்களும், பரலோகத்தையே நோக்கி இருக்கட்டும். ஒருநாள் தேவனுடைய ராஜ்யத்திற்கு நீங்கள் செல்லும்போது, "பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே" என்று, அவர் உங்களை அன்போடுகூட அழைப்பார்.

நினைவிற்கு:- "நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" (பிலி. 3:20).