என்றைக்கும் ஆசீர்வாதம்!

"உமது அடியானின் வீடு என்றைக்கும் இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்" (1 நாளா. 17:27).

கர்த்தர், உங்களை ஆசீர்வதிக்கிறது மாத்திரமல்ல, உங்களுடைய வீட்டையும் ஆசீர்வதிக்கிறார். வீட்டின் பிள்ளைகளையும் ஆசீர்வதிக்கிறார். வீட்டின் பணிமூட்டுக்களையும் ஆசீர்வதிக்கிறார். மாத்திரமல்ல, அவர் உங்களோடு வந்து உங்களுடைய வீட்டில் தங்கியும் விடுகிறார். அன்றைக்கு இயேசு, சகேயுவினுடைய வீட்டை ஆசீர்வதிக்க விரும்பி, "சகேயுவே, நான், உன் வீட்டில் தங்க வேண்டுமென்று" கேட்டார். சகேயு, அப்படிப்பட்ட அன்பின் வார்த்தைகளை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒருவேளை, அதற்கு முன்பு சகேயுவினுடைய வீட்டில், குடிகார நண்பர்கள், கேலியும், பரியாசமும் செய்கிற சிநேகிதர்கள், அரசாங்கத்திலுள்ள உயர்மட்ட அதிகாரிகள், எல்லாம் வந்து தங்கி இருந்திருக்கக்கூடும். ஆனால், இயேசு அந்த வீட்டிற்குள் வந்தபோதோ, நிலைமை முற்றிலும் மாறி விட்டது. "அன்றைக்கு, அந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது." ஒரு வீட்டுக்கு, கர்த்தர் தருகிற ஆசீர்வாதங்களில், பெரிய ஆசீர்வாதம் "இரட்சிப்பு" அல்லவா?

அன்றைக்கு, பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்காரன் வீட்டிற்கு சென்றார்கள். வேதம் சொல்லுகிறது: "அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும், கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்" (அப். 16:32). இதனால், அந்த வீட்டுக்கு வந்த ஆசீர்வாதம் என்ன தெரியுமா? அந்த வீட்டார் அனைவரும் இரட்சிக்கப்பட்டது மாத்திரமல்ல, ஞானஸ்நானமும் பெற்றுக்கொண்டார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களையும், உங்கள் வீட்டாரையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். கர்த்தர் உங்களுடைய வீட்டை ஆசீர்வதிக்கிறபடியினால், அந்த ஆசீர்வாதம் என்றென்றைக்கும் உங்களோடுகூட இருக்கும். அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள, நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

முதலாவதாக, நீங்கள் அதிகாலைவேளை எழும்பி கர்த்தரைத் தேடுங்கள். அதிகாலையில் தேடுகிறவன், கர்த்தரைத் கண்டடைகிறான். "அதிகாலையில், உமது கிருபையைக் கேட்கப்பண்ணும். உம்மை நம்பி இருக்கிறேன்" (சங். 143:8) என்று, தாவீது சொல்லுகிறதைப் பாருங்கள். இரண்டாவதாக, வேத வசனத்தை வாசித்து தியானியுங்கள். ஈசாக்கின் குடும்பத்தை ஆசீர்வதித்ததின் ஒரு காரணம், ஈசாக்கு ஒரு தியான புருஷனாயிருந்தார். ஆதியாகமம் 24:63-ஐ வாசித்துப் பாருங்கள். சாயங்காலவேளையிலே, ஈசாக்கு தியானம் பண்ண வெளியே போய் இருந்தார், என்பதை நாம் வாசிக்கலாம். மூன்றாவதாக, யாக்கோபைப்போல தேவனிடத்தில் போராடி ஜெபியுங்கள். என்னை ஆசீர்வதித்தாலொழிய, உம்மை விடுவதில்லை என்று மன்றாடுங்கள். அப்பொழுது, இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை யும் நீங்கள் பெற்றுக்கொள்ளுவீர்கள். நான்காவதாக, நீங்கள் ஒவ்வொருநாளும் கர்த்தரோடுகூட உறவாடுங்கள். எந்த காரியத்தைச் செய்தாலும், இயேசு உங்களோடே இருக்கிறார் என்கிற உணர்வோடு அவர் உங்களை வழி நடத்திச் செல்ல ஒப்புக்கொடுங்கள். ஆபிராகம், ஈசாக்கு, ஏனோக்கு, நோவா போன்ற பரிசுத்தவான்கள் எல்லாம் தேவனோடுகூட நடந்தார்கள். அதனால் அவர்கள் குடும்பம் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டது. தேவபிள்ளைகளே, கர்த்தர் நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- "கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்" (சங். 115:12).