ஏற்ற காலத்தில் ஆசீர்வாதம்!

"ஏற்றகாலத்திலே மழையைப் பெயப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெயும்" ( எசே. 34:26).

வறண்ட நிலத்திற்கு, மழை எத்தனை பெரிய ஆசீர்வாதம்! வாடிப்போன மரம், செடி, கொடிகளுக்கு மழையினால் எத்தனை பெரிய புத்துணர்ச்சி! அதுபோலவே, துயரமும், துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில், கிறிஸ்துவினுடைய பிரசன்னமும், அவருடைய தெவீக அன்பும் உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியானது! "ஆசீர்வாதமான மழை பெயும்" என்று கர்த்தர் சொல்லுகிறார்!

மழை பெய்தால்தான் கிணற்றுக்கு தண்ணீர், குடிப்பதற்கு தண்ணீர், பயிர் பச்சைகளுக்கு தண்ணீர். மழை பெய்யாவிட்டால் எல்லா ஊரும், பட்டணமும் பாலைவனமாகி விடும். பாலைவனத்தை யார் விரும்புவார்கள்? வறண்ட நிலத்தில் யார் குடியிருப்பார்கள்?

மேகங்கள் நிறைந்திருந்தால், மழையைப் பூமியின்மேல் பொழியும் (பிர. 11:3). உங்கள் உள்ளத்தில், கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நிறைந்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் உன்னத ஈவுகள் பொழியும். ஆத்துமாவில் விசுவாசம் நிறைந்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குக் கொடுக்கப்படும்.

மழை எப்படி பொழிகிறது? யோபு பக்தன் சொல்லுகிறார்: "அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழை யாச் சொரிகிறது" (யோபு 36:27). நீர்த்துளிகள் அணுவைப்போல ஏறுவதைப் போல தான், உங்களுடைய ஜெபம் பரலோகத்தை நோக்கி ஏறுகிறது. ஜெபத்தை, விசுவாசம் என்னும் காற்று, பரலோகத்திற்கு உயர்த்தி கொண்டு செல்கிறது. அது கர்த்தருடைய உள்ளத்தை குளிரப்பண்ணி, உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதமான மழை பொழிகிறது; ஜெபத்திற்குப் பதில் கிடைக்கிறது. உள்ளமும், வாழ்க்கையும் செழுமை அடைகின்றன.

மழையை, "பரிசுத்த ஆவிக்கு" ஒப்பிட்டு வேதம் சொல்லுகிறது; "பின்மாரி காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளிகளில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்" (சக. 10:1).

முன்மாரி மழையுமுண்டு, பின்மாரி மழையுமுண்டு. முன்மாரி காலத்து மழை, ஆதி அப்போஸ்தலர் நாட்களில் ஊற்றப்பட்டது. மேல் வீட்டறையில் பலத்த இடி, முழக்கத்தோடு கர்த்தர் அக்கினி மழையாக, பரிசுத்த ஆவியை அனுப்பிக் கொடுத்தார். உன்னத ஆசீர்வாதமாகிய மழை பொழிந்தது. அபிஷேக மேகங்கள் நிறைந்திருந்ததால், பரிசுத்த ஆவியின் மழை நூற்றிருபது பேரையும் நனையப் பண்ணியது.

ஆனால், கர்த்தரோ இந்த நாட்களில் பின்மாரியை கட்டளையிடுவேன் என்று வாக்களித்திருக்கிறார். யோவேல் தீர்க்கதரிசியின் மூலமாக, அவர் வாக்குப்பண்ணியதை வாசித்துப்பாருங்கள். "அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியையும், பின்மாரி யையும் ஏற்கெனவே வருஷிக்கப்பண்ணுவார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்" (யோவேல் 2:23, 24).

அக்காலத்தில், பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள், பாலா ஓடும். யூதாவின் ஆறுகள் எல்லாம், பிரவாகித்து ஓடும்; ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு, சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாச்சலாக்கும் (யோவே. 3:18).

நினைவிற்கு:- " அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை" (யோபு 26:8).