அதிசயத்தைக் காண்பீர்கள்!

"உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்" (மீகா. 7:15).

அனைத்து ஆசீர்வாதத்தின் கதவுகளும், உங்களுக்கு மூடப்பட்டதுபோல இருக்கிறதா? என்ன செய்வது என்று அறியாமல் அங்கலாக்கிறீர்களா? இன்றைக்கு கர்த்தர், "அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்" என்று வாக்களிக்கிறார். அவருடைய நாமம் அதிசயமானவர்!

சிவந்த சமுத்திர கரையிலே இஸ்ரவேலர் வந்து நின்றபோது, "என்ன செய்வது?" என்று அறியாமல் அங்கலாத்தார்கள். முன்புறம் கடல், பின்புறம் எகிப்தியரின் சேனை. இரண்டு பக்கங்களிலும், பெரிய மலைகள் செல்வதற்கு வழியே இல்லை. பயமும், கலக்கமும் அவர்களை ஆட்கொண்டது. அதிசயங்களைக் காணப் பண்ணுவேன், என்று வாக்களித்த கர்த்தர், மோசேயைப் பார்த்து: "நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போவார்கள்" என்றார் (யாத். 14:16).

மோசேயின் கைகளில் இருந்த சாதாரண கோல், அதிசயங்களைச் செய்யும் கோலாக மாறிவிட்டது. இன்று, கர்த்தர் உங்களுடைய கைகளிலும் ஒரு கோலைக் கொடுத்திருக்கிறார். அது வேத வசனமாகிய கோல்; வாக்குத்தத்தமாகிய கோல். அந்த வாக்குத்தத்த வசனங்களின் மூலமா, கர்த்தருடைய அதிகாரங்களையும் வல்லமையையும் நீங்கள் செயல்படுத்துகிறீர்கள். அது, அதிசயங்களை அடுக்கடுக் காய் கொண்டு வருகிறது.

தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களை, உறுதியோடு பிடித்துக் கொள்ளுங்கள். "தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே" (2 கொரி. 1:20).

எலியா, நம்மைப்போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், பலத்த அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார். மழை பெய்யாதிருக்க, வானத்தை அடைத்தார். பின்பு மழை பெய்யும்படி, மேகங்களுக்கு கட்டளையிட்டார். காரணம் என்ன? வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர் என்பது, அவருக்குத் தெரியும்.

தேவபிள்ளைகளே, ஒவ்வொரு சூழ்நிலைக்கும் கர்த்தர் உரைத்திருக்கிற வாக்குத் தத்தங்களுமுண்டு. நம்முடைய முற்பிதாக்களோடும், அவர்களுடைய சந்ததியாரோடும் அவர் செய்திருக்கும் உடன்படிக்கைகளுமுண்டு. அவைகளெல்லாம், வேத புத்தகத்தில் நமக்கு உதவியாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த வாக்குத்தத்த வசனங்களே மோசேயின் கோலைப் போன்று, நம் வாழ்க்கையிலும் அதிசயங்களைக் காணச் செய்கிறது.

வாக்குத்தத்தங்களை பற்றிப் பிடித்து, ஜெபிக்க ஆரம்பித்து விடுங்கள். "நீர் சொன்னீரே, ஆண்டவரே எனக்கு செயும்" என்று, புத்திரசுவிகார ஆவியோடு உரிமையோடு கேளுங்கள். சாலொமோன் அப்படித்தான் ஜெபித்தார். "தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்" என்றார் (1 இராஜா. 8:24).

வேதம் முழுவதிலும், அவர் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர் என்றும். அதிசயங்களைச் செய்கிறவர் என்றும், நீங்கள் திரும்பத் திரும்ப வாசித்து இருக்கலாம் அவர், தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும், தரையிலே விழுந்து போகவிடவில்லை (1 சாமு. 3:19).

நினைவிற்கு:- "அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம் பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்" (ஏசா. 46:11).