அதிசயத்தைச் செய்வேன்!

"இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்" (ஏசா. 29:14).

நம்முடைய தேவன் அதிசயங்களின் தேவன். அவர், ஆராந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிறார் (யோபு 9:10). தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறதினாலும், அவர் உங்கள் பட்சத்திலிருக்கிறதினாலும், உங்கள் வாழ்க்கையெல்லாம் அனுதினமும் அதிசயத்தாலும், அற்புதங்களாலும் நிறைந்திருக்கும். நீங்களும், உங்களுடைய பிள்ளைகளும், இஸ்ரவேலின் தேவனாலே அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் விளங்குவீர்கள். அல்லேலூயா!

நமது அருமை ஆண்டவர், கானாவூர் கலியாண வீட்டிற்குக் கடந்து வந்தார். அங்கே, அற்புதத்தைச் செய்து குறைவுகளையெல்லாம் நிறைவாக்கினார். என் தேவன், தன்னுடைய மகிமையான ஐசுவரியத்தின்படியே, இன்று உங்களுடைய குறைவுகளையெல்லாம் நிறைவாக்க, அதிசயங்களின் தேவனாய் இருக்கிறார்.

நூற்றுக்கு அதிபதி இயேசுவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, தன் வேலைக்காரனுக்காக மன்றாடினபோது, கிறிஸ்து ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லி, அற்புதத்தை நிகழ்த்தினார். "நீ போகலாம். உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக்கடவது" என்று சொன்ன வார்த்தை, உடனே அதிசயத்தைக் கொண்டுவந்தது. தேவபிள்ளைகளே, நீங்களும் இன்றைக்கு ஒரு அதிசயத்தைக் காண்பீர்கள்.

முப்பத்தெட்டு வருட காலமாய், பெதஸ்தா குளத்தோரம் வியாதியஸ்தனாய் படுத்துக் கிடந்த பலவீனமான மனுஷனை, கிறிஸ்துவே தேடி வந்து, வலிய அவனோடு பேசி, அவனுடைய வாழ்க்கையில் அற்புதத்தைச் செய்தார். அவன் மகிழ்ச்சியோடுகூட, படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தான். அந்த தேவன் உங்களுடைய வாழ்க்கையிலும் அற்புதத்தைச் செய்ய, உங்கள் பலவீனங்கள் நோய்கள் எல்லாவற்றையும் மாற்றிப்போட, வல்லமையுள்ளவராயிருக்கிறார்.

இரவெல்லாம் மீன் பிடித்தும், ஒன்றும் கிடைக்காமல் தவித்த பேதுருவின் வாழ்க்கையில், கர்த்தர் அற்புதத்தைச் செய்து, அவருடைய வலைகள் கிழியத்தக்கதாய் மீன்களைக் கொடுத்தார். தேவபிள்ளைகளே, அதே அதிசயங்களின் தேவன், உங்களுடைய வறுமை, பற்றாக்குறை, கடன் பிரச்சனைகளிலிருந்து ஒரு அற்புதத்தைச் செய்து, உங்களை அதிசயமாய் ஆசீர்வாதிப்பார்.

லேகியோன் பிசாசினால் பாதிக்கப்பட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொண்டு, கல்லறைகளின் மத்தியிலே வீற்றிருந்த அந்த வாலிபனின் வாழ்க்கையில், கர்த்தர் ஒரு அதிசயத்தைச் செய்து, அவனை வஸ்திரம் தரித்தவனாய் புத்திதெளிந்தவனாக, தன்னுடைய பாதத்தில் உட்காரும்படி, அவர் அதிசயத்தை செய்தார். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியானவர், உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும், மகிமையாய், மேன்மையாய் மாற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார். பேதுருவின் மாமியின் வீட்டுக்கு இயேசு சென்றபோது அங்கேயும் அவர் ஒரு அற்புதத்தைச் செய்தார். அதினால் பேதுருவின் மாமி, இமைபொழுதில் சுகமடைந்து கிறிஸ்துவுக்குப் பணிவிடை செய்தாள். தேவபிள்ளைகளே, உங்களை சுகமாக்கும்படி தன்மேல் தழும்புகளை ஏற்றுக் கொண்ட தேவன், இப்பொழுதே அற்புதத்தைச் செய்யும்படி, உங்களுக்கு நேராய் தன்னுடைய கைகளை நீட்டுகிறார்.

நினைவிற்கு:- "நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?" (எரேமி. 32:27).