குறைவானது ஒழிந்துபோம்!

"நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்" (1 கொரி. 13:10).

தன் மகனது ஒளிமயமான எதிர்கால வாழ்க்கையை எதிர்பார்த்த அன்புத்தாய், அவனை கல்லூரிக்குப் படிக்க அனுப்பினார்கள். அங்கே, அவன் இரட்சிக்கப்பட்டான். ஒரு கூட்டத்தில் மிஷனெரி சவாலைக் கேட்டு, தன்னை வெளிதேசத்திலுள்ள காட்டுமிராண்டி மக்கள் மத்தியில் சென்று, ஊழியஞ் செய்ய ஒப்புக்கொடுத்தான். தன் தீர்மானத்தை தன் தாய்க்கு எழுதி, "அம்மா, கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது. உங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன்" என்று எழுதினான்!

அந்தக் கடிதத்தை வாசித்த தாயின் உள்ளம் கலங்கியது. "என் ஒரே மகனல்லவா? என்னோடிருப்பானென்று எண்ணினேனே! காட்டுமிராண்டிகள் மத்தியில் அவன் எப்படி உயிர் வாழ்வான்? அங்கு ஒரு வசதியும் அவனுக்கிருக்காதே? எங்கே தங்குவான்? அவன் அதிகமாய் பாடனுபவிக்க வேண்டியதிருக்குமே" இப்படியாய் பலவாறாக எண்ணி, எண்ணி, அந்தத் தாயின் மனம் கலங்கியது!

மகனுக்கு பதில் எழுத ஆரம்பித்தார்கள். "போக வேண்டாம்" என்று எழுத, கை வரவில்லை. கண்களிலிருந்து கண்ணீர், அந்த பேப்பரில் கொட்டிக் கொண்டே இருந்தது! ஒரு வரி எழுதுவதும், பின்பு கண்ணீர் சிந்துவதுமாயிருந்த அவர்கள், கடைசியில் அனுமதி கொடுத்து விட்டு, "மகனே, தேவன் தன் ஒரேபேறான குமாரனை உலகத்தில் அனுப்பும்போது, அந்த அன்புள்ள பிதாவின் உள்ளம் எவ்வளவு பாடுபட்டு இருக்குமென்று, இதுவரை நான் உணர்ந்து பார்த்ததுமில்லை; சிந்தித்ததுமில்லை!

ஆனால், இப்பொழுது உன்னை மிஷனெரியாக அனுப்ப, என் உள்ளம் படுகிற வேதனையின் மூலமாகத்தான், பிதாவின் அன்றைய வேதனையை அறிய முடிகிறது! அவருக்கு, கிறிஸ்து ஒரேபேறான குமாரனல்லவா? அவர், கிறிஸ்துவை அனுப்பிய தியாகத்தில், கோடியில் ஒரு பகுதி தியாகமாக, நானும் உன்னை அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆம், கிறிஸ்துவின் நிறைவான அன்பு அவர்கள் உள்ளத்தில் வந்தபோது, கேள்விகள், தடைகள், சந்தேகங்கள் எல்லாம் நீங்கினது.

ஒரு ஆரஞ்சு பழத்தை, தண்ணீருள்ள ஒரு கண்ணாடி டம்ளரில் பிழிந்தால், ஆரஞ்சு விதைகளெல்லாம், டம்ளரின் அடியில் போய் தங்கும். கொஞ்சம், கொஞ்சமாய் சர்க்கரை சேர்த்து, கலக்கிக்கொண்டே வந்தால், கீழே தங்கிய விதைகளெல்லாம் மிதப்பதைக் காணலாம். விதைகளை, மிக எளிதாக அப்புறப்படுத்தி விடலாம்.

அப்படியே உங்களுடைய வாழ்க்கையில், பரிசுத்த ஆவியானவர் வரும்போது, தெவீக அன்பு இருதயத்தில் ஊற்றப்படுகிறது. அப்பொழுது, உங்கள் உள்ளத்தின் அடியில், தங்கிக்கிடந்த மாம்சீக அன்புகள், அந்நிய அன்புகளெல்லாம், கல்வாரி அன்போடுகூட, போட்டிப்போட முடியாமல் மிதந்து விடுகின்றன.

தேவபிள்ளைகளே, அந்நிய அன்பு உங்களை அடிமைப்படுத்தியிருக்கிறதோ? அதை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களோ? ஒன்று செய்யுங்கள்! கல்வாரி அன்பை, கண்ணீரோடு தியானஞ் செய்யுங்கள். அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் அந்நிய அன்புகளை, உங்கள் வாழ்க்கையை விட்டு விரட்டியடிப்பார். நீங்கள் ஜெயங்கொண்ட பரிசுத்தவான்களாவீர்கள்.

ஆம், நிச்சயமாகவே, "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்" (1 கொரி. 13:10). நிறைவான அன்பு, கர்த்தருடைய கல்வாரி அன்பே. குறைவான அன்பு, உலகத்தின் அன்பு!

நினைவிற்கு:- "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை" (1 யோவான் 2:15).