புதிய காரியத்தை!

"இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்" (ஏசா. 43:18,19).

நம் ஆண்டவர், வழிகளைத் திறப்பதில் ஆச்சரியமானவர். எல்லாப் பக்கங்களிலும் கதவு அடைக்கப்பட்டிருக்கிற சூழ்நிலை ஏற்படும்போது, அவர், வனாந்தரத்திலே வழியைத் திறந்து தர வல்லமையுள்ளவர். அவர், தம்மை நம்புகிறவர்கள் மேல் பாராட்டுகிற தயவு இணையற்றது.

ஒரு சகோதரனின் வாழ்க்கையில் மிகவும் பிரச்சனையாகி, பாதைகள் எல்லாம் அடைக்கப்பட்டபோது, மிகவும் மனம் சோர்ந்து போனார். எந்த வழியில் செல்வது என்று அறியாமல், கலங்கி, ஆலய ஆராதனைக்கு வந்தார். அவருடைய மனப் போராட்டத்தையும், வேதனையையும் கர்த்தர் ஒருவரே அறிவார்.

பிரசங்க வேளையில் பிரசங்கித்துக் கொண்டிருந்த போதகர், திடீரென்று அவர் பக்கமாய் திரும்பி, "முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்" (ஏசா. 43:18) என்று, தீர்க்கதரிசனம் போல உரைத்தார். அந்த வார்த்தைகள், வல்லமை அந்த சகோதரன் மேல் இறங்கி வந்தது. கர்த்தர், அவரோடு பேசுகிற உணர்வு அவரை பெலன்கொள்ள செய்தது.

அன்றுதாமே, கர்த்தர் சொன்னபடி அவருடைய வாழ்க்கையில், புதிய காரியத்தைச் செய்தார். வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதுபோல, எதிர்பாராத இடத்திலிருந்து நன்மையான செய்தி கிடைத்து, அவர் ஆத்துமாவைக் குளிரப் பண்ணிற்று.

தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் புதிய காரியத்தைச் செய்ய விரும்புகிறார். ஒன்றை, "வேண்டாம்" என்று கர்த்தர் தடுத்து நிறுத்துகிறார் என்றால், அதைவிட மேன்மையான புதிய காரியத்தைத் தன் பிள்ளைகளுக்குச் செய்ய, அவர் ஆவல் கொண்டிருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

உங்களுடைய நினைவுகளைப் பார்க்கிலும், கர்த்தருடைய நினைவுகள் ஆயிரம் மடங்கு மேன்மையானவை. உங்களுடைய வழிகளைப் பார்க்கிலும், கர்த்தருடைய வழிகள் ஆயிரம் மடங்கு சிறந்தவை. நீங்கள், கொஞ்ச மூளை அறிவினால் சிந்திக்கிறீர்கள். ஆனால், கர்த்தரோ அனந்த ஞானமுடையவராயிருந்து, தன் பிள்ளைகளுக்குச் சிறந்ததைக் கொடுக்கவே அவர் விரும்புகிறார்.

இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்தை விட்டு வெளியே வந்தபோது, முன்னால் செங்கடல் குறுக்கிட்டது. இருபுறமும் மலைகள். பின்புறமோ, பார்வோனுடைய சேனைகள் துரத்திக் கொண்டு வந்தன. எந்த வழியிலே செல்வார்கள்? சமுத்திரத்தின் மேல், கப்பலிலோ படகிலோ செல்வதுதான் பழைய வழி. ஆனால், புதிய காரியத்தைச் செய்கிறேன் என்று சொல்லுகிறார்.

இந்த புதிய காரியம் என்ன? செங்கடலை இரண்டாய் பிளந்தார். கடலின் நடுவே, வழியை உண்டாக்கினார். இஸ்ரவேல் புத்திரர், சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். அவர்கள், வலது புறத்திலும் இடது புறத்திலும், ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது (யாத். 14:22).

தேவபிள்ளைகளே, அந்த தேவன் உங்களுடைய தேவன், அவர் பட்சபாதம் உடையவர் அல்ல (அப். 10:34). நிச்சயமாகவே, அவர் உங்களுக்கு அற்புதத்தைச் செய்வார்.

நினைவிற்கு:- "ஆராந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 9:10).