எல்லாம் கிருபையே!

"கர்த்தருடைய கிருபையோ, அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது" (சங். 103:17).

"மனிதன் கட்டிலை வாங்கலாம். ஆனால் தூக்கத்தை விலை கொடுத்து வாங்க முடியாது" என்பது பழமொழி. பெரிய, பெரிய பணக்காரர்களிடத்தில், "ஐயா எவ்வளவு பணம் சம்பாதித்து, பங்களா, கார் என்று, சேர்த்தாலும் என்ன பயன்? நிம்மதியில்லையே? இரவிலே தூக்கம் வரவில்லையே? உண்மையாய் என்னை நேசிக்க ஒருவருமில்லையே? சமாதானமில்லையே? சந்தோஷமில்லையே? நான் நம்பியிருந்தவர்களெல்லாம் என்னை கைவிட்டு விட்டார்களே. இந்த உலகத்திலே, யார் என்னை தேற்றுவார்?" என்ற வேதனைக் குரல்தான் கேட்கிறது.

நீங்கள் பணத்தை வைத்துக்கொண்டு நன்றாகப் புசித்து, குடித்து, திருப்தியாய் இருக்கலாம். ஆனால் உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் இருக்கிறதா? வேதம் சொல்லுகிறது, "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?" (மாற். 8:36).

ஆனால் நீதியின் பாதையில் நீங்கள் நடக்கும்போது, உங்களுக்கு நித்திய ஜீவனும், அதினிமித்தமாய் நித்திய மகிழ்ச்சியும் உண்டாகும். இதோ, நித்திய ஜீவனை நீங்கள் பெறும்படிக்கு, கிறிஸ்து தாமே, சிலுவையிலே தன்னையே ஒப்புக் கொடுத்தார்.

"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்" (யோவா. 14:1). "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக" (யோவா 14:27) என்று இயேசு கிறிஸ்து வாக்குப் பண்ணியிருக்கிறார்.

வேதத்தில் சகேயுவைப் பாருங்கள். அவனிடத்தில் இல்லாதது ஒன்றும் இல்லை. அவன் ஐசுவரியவானாய் இருந்தான். ஆனால், இயேசுவினிடத்தில் ஏதோ, ஒன்று விசேஷமாக இருக்கிறது என்பதை அறிந்தவனாய், இயேசுவைப் பார்ப்பதற்கு மரத்தின் மேல் ஏறினான். அதிகமாய் வரி வசூலித்ததினால், மக்களிடத்தில் அவனுக்கு நன்மதிப்பு இல்லை. நிச்சயமாய் அவனுக்கு சந்தோஷமும், சமாதானமும் இருந்திருக்காது. இயேசு சகேயுவைப் பார்த்து: "இறங்கி வா; இன்று உன் வீட்டில் நான் தங்க வேண்டும்" என்கிறார். எவ்வளவு பெரிய கிருபை பாருங்கள். அன்றைக்கு அவன் வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது.

ஒரு மனிதன் பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் அதை அவன் அனுபவிப்பதற்குரிய கிருபையைத் தருகிறவர், இயேசு கிறிஸ்து ஒருவரே. பிரசங்கி சொல்லுகிறார், "தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும் தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்" (பிர. 5:19).

பொன்னோ, பொருளோ இவ்வுலகத்தில் உங்களை சந்தோஷமாக வைக்க முடியாது. ஆனால் தேவ கிருபையோ, இந்தப் பூமியின் ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரித்து கொள்ளவும், அதை அனுபவிக்கவும், மற்றும் பரலோக ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும் அநுக்கிரகிக்கும். "இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறீர்கள்" (ரோமர் 3:24). தேவ கிருபையே எல்லாவற்றிற்கும் எல்லாமுமானது!

நினைவிற்கு:- "நான் தெரிந்துகொண்டவர்கள், தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்" (ஏசா. 65:22).