கர்த்தரால் வரும் சுதந்தரம்!

"பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்" (சங். 127:3).

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றால்தான், குடும்பத்தை நடத்த முடியும் என்ற ஒரு நிலை, உருவாகிவிட்டது. இதனால் பாதிக்கப்படுகிறவர்கள், பிள்ளைகள்தான். பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பெற்றோர்கள் வேலை, வேலை என்று ஓடுவதினால், பிள்ளைகள் வழி தவறிப் போக, வழி வகுக்கிறார்கள். "அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்" (மத். 6:34) என்ற வார்த்தையின்படி, இருக்கிறதைக் கொண்டு திருப்தியாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.

சிறுவயதிலே, பெற்றோரால் பராமரிக்கப்படாத சிறுபிள்ளைகள், தங்கள் வாலிப வயது வரும்போது, பெற்றோரை புறக்கணித்து விடுகிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் நடப்பதில்லை. பிள்ளைகள் முன்னால் கணவன், மனைவி இருவரும் சண்டைபோட்டுக் கொள்ளுகிறார்கள். இப்படி பிள்ளைகள் முன், சாட்சியற்ற கணவன் மனைவியின் முன்மாதிரியைப் பின்பற்றும் பிள்ளைகள், பிற்காலத்தில் பெற்றோரை கனப்படுத்துவதில்லை. உங்களை பின்பற்றுகிற பிள்ளைகளுக்கு, நீங்கள் ஒரு முன்மாதிரியாய் நடக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு என்னதான் வேலைப்பளு, கஷ்டங்களிருந்தாலும், என்ன அவசரங்களிருந்தாலும், பிள்ளைகளோடு செலவிட நேரத்தை ஒதுக்குங்கள்.

இந்தக் கடைசி நாட்களில், பெற்றோர்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். எப்போதும் இல்லாத அளவு, பிசாசானவன் சிறு பிள்ளைகளையும், வாலிபரையும் வஞ்சித்துக் கொண்டுவரும் நாட்களில் நாம் வாழ்கிறோம். Internet, Whatsapp, facebook மற்றும் பல Apps மூலமாயும் வீடியோ விளையாட்டின் மூலமாயும், பயங்கர முரட்டாட்டத்தையும், இச்சையையும் ஊட்டி, பிள்ளைகளின் வாழ்க்கையை சீர்குலைத்து விடுகிறான். நீங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக மிகவும் விழிப்புள்ளவர்களாகவும், ஜெபிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.

உங்களுடைய பிள்ளைகளை, சிறுவயதில் இருந்தே கர்த்தருக்கேற்ற வழிகளில் நடத்துங்கள். அவர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுங்கள். ஜெபிக்க கற்றுக் கொடுங்கள். ஆலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். வீட்டிலே குடும்ப ஜெபம் நடத்துங்கள். ஒவ்வொருநாளும் "வேதத்தை படித்தால்தான், சாப்பாடு" என்று சொல்லுங்கள். பிள்ளைகள் இந்தக் காலக்கட்டத்தில், சுபாவ அன்பில்லாதவர்களாயும், சுயநலமுள்ளவர்களாயும் இருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் முதலாவது அன்பிலே நடந்து கொள்ளுங்கள். "நீ அவைகளை உன் பிள்ளை களுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு" (உபா. 6:7-8).

"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்" (நீதி. 22:6). கர்த்தருக்கேற்ற நீதியிலும், நியாயத்திலும் பிள்ளைகளை வழிநடத்துங்கள். அப்பொழுது, "உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக்கன்றுகளைப்போல இருப்பார்கள்" (சங். 128:3). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த பிள்ளைகளைக் குறித்து, கர்த்தரிடம் கணக்கொப்புவிக்க வேண்டும் என்ற பாரமும், பயமும், உங்கள் உள்ளத்தில் எப்பொழுதும் காணப்படட்டும்.

நினைவிற்கு: "உன் பிள்ளைகளெல்லாரும் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்" (ஏசா. 54:13).