முதிர்வயது வரையிலும் தாங்குகிற கர்த்தர்!

"முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்" (சங். 71:9).

ஒரு வயதான மூதாட்டி மிகவும் வியாதிப்பட்டிருந்தார்கள். அவர்கள் வியாதிப் பட்டிருக்கிறதை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அறிந்து, அவர்களை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்கள். அவர்கள் சிகிச்சை பலனின்றி, அங்கேயே மரித்து விட்டார்கள். அவர்கள் மரித்த பின்தான், அவர்கள் மிகுந்த செல்வம் படைத்தவர்கள் என்பது, மற்றவர்களுக்குத் தெரிய வந்தது. அப்போது, அநேகர் அவர்களை சொந்தம் பாராட்டிக்கொள்ள வந்தார்கள்.

அவர்களுக்கு உயிரோடிருக்கும்போது, டைரி எழுதுகிற பழக்கம் இருந்தது. அவர்கள் ஆஸ்பத்திரியிலிருந்தபோது, எழுதிய ஒரு டைரியை கண்டார்கள். அதில் அவர்களுடைய உள்ளத்தின் பாரத்தையும், ஏக்கத்தையும் ஒவ்வொன்றாக எழுதி யிருந்தார்கள்.

ஒவ்வொருநாளும் குறிப்பாக அதில், "இன்று, என்னைப் பார்க்க யாரும் வரவில்லை. இந்த கிழவி உயிரோடிருக்கிறாள் என்று, எல்லோரும் என்னைக் குறித்து நினைக்கிறார்களோ என்னவோ?" என்று, பரிதாபமாக எழுதியிருந்தார்கள். அவர்களுடைய உள்ளத்தில், வயதான காலத்திலே எவ்வளவு ஏக்கம், எதிர்பார்ப்பு இருந்திருக்கும். எவ்வளவோ மனவேதனை இருந்திருக்கும்!

அந்த வயதான மூதாட்டியைப்போல, நீங்கள் யாருமற்ற நிலைமையில் உங்கள் நாட்களை கழித்துக்கொண்டிருக்கிறீர்களோ? கலங்காதிருங்கள். கர்த்தர், உங்களை ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்.

"தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்" (யோவா. 13:1) என்று வேதம் சொல்லுகிறது. முடிவுபரியந்தம் உங்களை நேசித்து, வழிநடத்துகிற இயேசு இரட்சகர் உங்களுக்கு உண்டு என்பதை மறந்துபோகாதிருங்கள்.

கர்த்தர் சொல்லுகிறார், "உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன். இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" (ஏசா. 46:4).

"அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்" (சங். 92:15). முதிர்வயது வரைக்கும் கர்த்தர் உங்களை பெலப்படுத்தி கர்த்தருக்கென்று கனி கொடுக்கிறவர்களாய் மாற்றுவார். ஆகவே தனிமையிலே துவண்டு போகாத படிக்கு கர்த்தரிலே சார்ந்துகொள்ளுங்கள்.

தாவீது கர்த்தரிடத்தில் கேட்டார், "தேவனே, என் சிறுவயது முதல் எனக்குப் போதித்து வந்தீர்; இப்பொழுதும் தேவனே, இந்த சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும், நரைமயிருள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக" (சங். 71:17,18).

அப்படியே தாவீதுக்கு கர்த்தர் இரக்கம் பாராட்டினார். கடந்த காலத்தில் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து கர்த்தரைத் துதிக்கும்போது, வருங்காலத்திலும் வழிநடத்த அவர் வல்லமையுள்ளவர், என்ற விசுவாசம் உங்கள் உள்ளத்தில் ஏற்படும். "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம், சகல நாட்களிலும் நான் உங்க ளோடுகூட இருக்கிறேன்" என்று வாக்குப்பண்ணின தேவன், உங்களோடுகூட இருந்து, உங்கள் முதிர்வயது வரைக்கும் உங்களை காத்து வழிநடத்துவாராக.

நினைவிற்கு:- "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவது மில்லை" (யோசுவா 1:5).