பரியாசமும், பதிலும்!

"வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்" (எபேசி. 5:4).

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்த குடியானவன் ஒருவனுக்கு, கர்த்தரை கேலி செய்து பேசுவதே வழக்கமாயிருந்தது. கர்த்தர், ஏதேன் தோட்டத்திலே நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை வைத்தது தவறு. அப்படி வைக்காதிருந்தால், ஆதாம், ஏவாள் அதை புசித்திருக்கவே மாட்டார்கள்" என்றான்.

இதை பக்தியுள்ள ஒரு ராஜா கவனித்துக் கொண்டேயிருந்தார். அந்த குடியானவனை அவர் அழைப்பித்தான். "நீர் கடின உழைப்பாளி என்று அறிந்து உன்னை மெச்சிக் கொள்ளுகிறேன். "இனி நீ வயல் வெளியில் கஷ்டப்படவேண்டாம். உனக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட புது அரண்மனையில், நீ ஒரு இளவரசனாக இருக்கலாம். ஆனால், இந்த அரண்மனையிலுள்ள எனது ஒரேயொரு அறையை மட்டும் திறக்கக்கூடாது. அது என்னுடைய "இரகசிய அறை" என்று சொல்லி, முழுவதையும் குடியானவனின் கைகளில் ஒப்புக்கொடுத்தான்.

அரண்மனையைக் கண்டு பிரமித்துப்போன குடியானவன், இளவரசனானான். ஒவ்வொரு அறையிலும், இவ்வளவு அழகான பிரகாசமான பொருட்கள் இருக்கிறதே. ராஜாவின் அறை, இன்னும் எவ்வளவு அழகாயிருக்கும். மன சபலத்தை அடக்க முடியாத அவன், ஒருநாள் யாருக்கும் தெரியாதபடி மெதுவாய் கதவைத் திறந்து பார்த்தான். அவ்வளவுதான், உள்ளே இருந்த ஒரு புறா தன் செட்டைகளை அடித்துப் பறந்து சென்றதே தவிர, வேறு ஒன்றும் அந்த அறையினுள் இருக்கவில்லை.

சில வினாடி நேரத்திற்குள், ராஜா அந்த புறாவோடு அங்கு வந்துவிட்டார். "ஏன் திறந்தாய்? ஏன் என் கட்டளையை மீறினாய்? நீ திறப்பாயோ, இல்லையோ? என்று அறியும்படி, என் புறாவை உள்ளே வைத்திருந்தேன்" என்றார் ராஜா. ஆதாம், ஏவாளைப்போலவே அந்த குடியானவனும் அரண்மனையிலிருந்து துரத்தப்பட்டான். அப்போதுதான் ஆதாம், ஏவாள் சரித்திரம் அவனுக்குப் புரிந்தது, இப்படித்தான் அநேகர் கர்த்தருடைய வார்த்தைகளை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வேத வசனங்களுக்கு முரண்பாடாய் பேசாதிருங்கள். கர்த்தருடைய வார்த்தைகள் ஆவியும், ஜீவனுமாயிருக்கிறது. தேவன் அப்படி செய்திருந்தால் நன்றாயிருக்குமே. ஏன் இப்படி செய்தார்? என்ற கேள்வி களை எழுப்பாதிருங்கள். கர்த்தருடைய வசனங்களை சந்தேகப்படாமல் நூற்றுக்கு நூறு நம்பி கீழ்ப்படியுங்கள்.

வேத வசனங்களுக்கு விரோதமான, புதிய கொள்கைகளை கட்டியெழுப்பாதிருங்கள். யோபுக்கு கர்த்தர் பிரதியுத்தரமாக, "சர்வ வல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்?" (யோபு 40:2) என்று கேட்கிறார். கர்த்தரையும், கர்த்தருடைய வார்த்தைகளையும் நம்புகிறவன், என்றென்றைக்கும் அசையாத சீயோன் பர்வத்தைப்போல இருப்பான்.

சாத்தான் பல வேளைகளில் உங்களை வசனத்தைக்கொண்டு சோதிப்பான். கர்த்தருடைய வார்த்தைகளை குற்றஞ்சாட்டி உங்களை நீதிமானாக்கிக் கொள்ளாதிருங்கள். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுப்பாரென்றால், அதை சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு பற்றிக் கொண்டு, கர்த்தர் அதை நிறைவேற்றித் தரும்வரை, உறுதியாய் ஜெபியுங்கள். கர்த்தருடைய வார்த்தையை நேசித்து, நம்பி, உங்கள் வாழ்க்கையிலே செயல்படுத்துங்கள். கர்த்தர் நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- "நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக் கொள்ளும்படி என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?" (யோபு 40:8).