ஞானமுள்ள எறும்பு!

"அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்" (நீதி. 30:25).

சாலொமோன் ராஜா வாலிபனாயிருந்தபோது, அவர் கர்த்தரோடு இசைந்திருந்து, தேவன் அவருக்குக் கொடுத்த ஞானத்தின்படியே அநேக நீதிமொழிகளை எழுதினது மட்டுமல்ல, மிருக ஜீவன்களைப் பற்றியும் ஆராய்ந்தறிந்து எழுதினார்.

"மகா ஞானமுள்ளவைகள்" என்று, அவர் "எறும்பையும், குழிமுசல்களையும் வெட்டுக்கிளிகளையும், சிலந்திப்பூச்சியையும்" குறிப்பிடுகிறார் (நீதி. 30:24-28). எறும்பு ஒரு அற்பமான ஜெந்துதான். ஆனால், அது காலத்தை அறிந்து, காலத்தை ஆதாயப்படுத்தி, மாரிகாலத்திற்கு ஆகாரத்தை சேர்த்தும் வைத்துக் கொள்ளுகிறது.

இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவதற்கு முன்பு, பிதாவுக்கு கீழ்ப்படிந்து, "தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ, வருகிறேன் என்றார்" (எபி. 10:7,4). ஆகவே தான், இயேசு சொன்னார், "பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியைச் செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது" (யோவா. 9:4).

பூமியிலே, ஒரு மனுஷனுக்கு பகற்காலம் எப்பொழுதும் நீடிப்பதும் இல்லை. கிருபையின் தருணங்கள், எப்பொழுதும் தொடர்ந்து கொடுக்கப்படுவதும் இல்லை. ஊழியம் செய்யும்படி இயேசுகிறிஸ்துவுக்கு கிடைத்த பகற்காலம், வெறும் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே. பகற்காலத்தை பயன்படுத்திக்கொண்ட இயேசு கிறிஸ்து, கிராமம், கிராமமாய் நடந்து, மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல, தோய்ந்து போன ஜனங்களைக் கண்டு பரிதபித்தார், அவர்களுக்காக மனதுருகினார், அற்புதங்களைச் செய்தார்.

ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையிலும் இராக்காலமுண்டு. தேசத்திலும் இராக்காலமுமுண்டு. இப்பொழுது உலகமும் ஒரு இராக்காலத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. "இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிர்ப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்" (ஏசாயா 60:2).

ரூமேனியா தேசம் ரஷ்யர்களால் பிடிக்கப்படுவதற்கு முன்பு, ஆவியானவர் அநேக தேவபிள்ளைகள் மூலம் எச்சரித்தார். வசனம் கிடைக்ககூடாத பஞ்சக் காலம் வரப்போகிறது என்று. அங்கு கிருபையின் காலம் முடிந்து, கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது. வேத புத்தகங்கள் பிடுங்கப்பட்டு எரிக்கப்பட்டன. வேதத்தின் ஒரு தாள், ஒரு பக்கம்கூட கிடைக்காமற்போயிற்று. ஆனால் வேதத்தை கற்றவர்கள் சித்திரவதை நேரங்களில் பெலன் ஊட்டும் வேத வசனங்களை மீண்டும், மீண்டும் சொல்லி, தேவ பெலத்தை பெற்றுக்கொண்டார்கள்.

எறும்பு ஆகாரத்தைச் சம்பாதிப்பதுபோல, தேவபிள்ளைகளே, உங்களுக்கு கிருபையாய் கொடுக்கப்பட்ட இந்த நாட்களிலே வேத வசனங்களை கற்றுக்கொள்ளுங்கள். ஆத்துமாக்களை ஆதாயம் செய்யுங்கள். நமக்காக கல்வாரியிலே ஜீவனைக் கொடுத்த அந்த அன்பின் நேசரை உயர்த்திக் காண்பியுங்கள்.

தாவீது சொல்லுகிறார், மரித்தவர்களும், மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள் (சங். 115:17). காலம் பொன்னானது. கிருபையின் காலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்த காரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம்" (ரோமர் 13:12).