ஞானமுள்ள குழிமுசல்!

"உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்" (சங். 104:18).

குழிமுசல்கள், கன்மலையிலே தங்கள் வீட்டைத் தோண்டி வைப்பதால், மகா ஞானமுள்ள ஜந்துக்களில், இது இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. குழிமுசல்கள் மென்மையானவை. அவற்றிற்கு தற்பாதுகாப்புக்கான அவசியமில்லை. பாம்பைப் போல விஷமோ, தேளைப்போல கொடுக்கோ, மாடுகளைப்போல கொம்போ இல்லை. இது கடிக்காது, உதைக்காது, எந்த தீமையும் செய்யாது.

தங்கள் பெலவீனத்தை உணருகிற அந்த ஜந்துக்கள் ஞானமாய் தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டி, தங்கள் பெலவீனத்தில் பெலனும், பாதுகாப்பும் பெறுகின்றன. தேவபிள்ளைகளே, கன்மலையாகிய கிறிஸ்துவை உங்கள் அடைக்கலமாக்கிக் கொள்வீர்களென்றால், நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

இயேசுவே அந்த கன்மலை. அந்த கன்மலையிலிருந்து இரட்சிப்பின் நீரூற்றுகள் சுரந்து வருகிறது. தாவீது சொல்லுகிறார், "என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்" (சங். 61:2).

உங்களுடைய இருதயம் தொய்யும்போது கன்மலையாகிய கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். அவரே உங்களுக்கு அடைக்கலமும், நீங்கள் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருப்பார். "தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்" என்று சங். 27:5-ல் தாவீது பாடி மகிழுகிறார்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய நம்பிக்கையை எதிலே வைத்திருக்கிறீர்கள்? பணத்தின்மேல் உங்கள் நம்பிக்கையிருக்கிறதா? படிப்பிலே உங்கள் நம்பிக்கையிருக்கிறதா? பதவியிலே உங்கள் நம்பிக்கையிருக்கிறதா? அல்லது செல்வத்திலும் செல்வாக்கிலும் உங்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறீர்களா?

சற்று சிந்தித்துப்பாருங்கள். உங்களுடைய நம்பிக்கையை நீங்கள் கிறிஸ்துவின்மேல் வைக்கும்போது, எந்தப் பிரச்சனைகள் வந்தாலும், போராட்டங்கள் வந்தாலும், மற்றவர்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பினாலும், எல்லாவற்றின் மத்தியிலும் கன்மலையாகிய கிறிஸ்துவே உங்களுக்கு அடைக்கலமாயிருந்து, உங்களுடைய எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுதலையை தந்தருளுவார். நீங்கள் சார்ந்துகொள்ளக் கூடிய ஒரு கன்மலை உண்டென்றால், அது இயேசுகிறிஸ்து ஒருவரே. அவருடைய இரத்தமே, உங்களுக்கு பாதுகாப்பு தருகிறது.

இயேசு கிறிஸ்து அல்லாமல் வேறே அஸ்திபாரமில்லை (1 கொரி. 3:11). கன்மலையின்மேல், தன் வீட்டைக் கட்டுகிறவன் புத்தியுள்ளவன். பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதினாலும் அது அசையாது. ஏனென்றால், பெரு வெள்ளங்களுக்கும், புயல் காற்றுகளுக்கும், கொடூரமானவர்களின் சீறல்களுக்கும் அந்த கன்மலையே புகலிடம்.

"அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும் வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்" (ஏசா. 32:2). தேவபிள்ளைகளே, இயேசு கிறிஸ்து நம் கன்மலையானவர். உறுதியான நங்கூரமானவர். மாறாத நித்தியமானவர். அவரிலே நமக்கு இரட்சிப்புண்டு. அடைக்கலம், ஆதரவு, பாதுகாப்புமுண்டு. அல்லேலூயா!

நினைவிற்கு:- "இதோ அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்; விசுவாசிக்கிறவன் பதறான்" (ஏசா. 28:16).