ஞானமுள்ள வெட்டுக்கிளிகள்!

"ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்" (நீதி. 30:27).

சாலொமோன் ஞானி, மாபெரும் ஞானமுடைய ஜந்துவாக கருதும் பிராணிகளில் மூன்றாவதாக, பவுஞ்சு பவுஞ்சாப் புறப்படும் வெட்டுக்கிளிகளைப் பற்றி குறிப்பிடுகிறார். வெட்டுக்கிளிகள் ஒற்றுமையாக செயல்படுகிறவை.

அவைகள் புறப்படும்போது, பவுஞ்சு பவுஞ்சாகத்தான் புறப்படும். அவைகளிலிருக்கும் ஏக சிந்தை, ஏக ஆவி, ஒற்றுமை, ஐக்கியம் சாலொமோனை வெகுவாய் கவர்ந்தது. ஆகையினால் தான், "பவுஞ்சு பவுஞ்சாக புறப்படும் வெட்டுக்கிளிகள்" என்று எழுதுகிறார்.

தேவபிள்ளைகளே, உங்களிடத்தில் அந்த அன்பின் ஐக்கியம் உண்டா? உங்கள் குடும்பத்தில் அன்பின் ஐக்கியம் இருக்கிறதா? சபையில் ஒருமனம் இருக்கிறதா? தாவீது சொல்லுகிறார், "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமானது?" (சங். 133:1). அன்பின் ஐக்கியம், முதலில் உங்கள் குடும்பத்தில் ஆரம்பிக்கட்டும். தீர்க்கதரிசி கேட்கிறார், "இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய, ஒருமித்து நடந்துபோவார்களோ?" (ஆமோஸ் 3:3).

இரண்டாவது, வெட்டுக்கிளிகள் எந்தப் பக்கம் காற்றடிக்கிறதோ, அதின் திசையிலே செல்லும். இதைக் குறித்து, யாத். 10 - ம் அதிகாரத்தில் நீங்கள் காணலாம். "காற்றின் திசை என்பது, ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும், தேவ சித்தத்திற்கும்" ஒப்பாயிருக்கிறது. உங்களை ஆவியானவரின் நடத்துதலுக்கு ஒப்புக்கொடுங்கள்.

ஆவியானவர் நடத்தும்போது, தேவ சித்தத்துக்கு நீங்கள் கீழ்ப்படியும்போது, அங்கே தோல்வியே இல்லை. எப்போதும் ஜெயம்தான். ஆவியானவர் நடத்தும்போது, எந்த வல்லமையும் உங்களை எதிர்நிற்க முடியாது. ஆதாம், ஏவாள் கர்த்தரால் நடத்தப்பட பிரியப்படாமல் சாத்தானுக்கு செவிகொடுத்ததினால் வீழ்ச்சியடைந்தார்கள். ஞானமுள்ள தேவபிள்ளைகள் கர்த்தருடைய சித்தத்தை அறிந்தே செயல்படுவார்கள். "ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்" (யோவா. 3:8).

மூன்றாவதாக, வெட்டுக்கிளிகள் சத்தத்திற்கு செவிகொடுக்கும். ராஜா இல்லாதிருந்தும், வெட்டுக்கிளிகள் ஒன்றுபோல் செயல்பட காரணம், அவை சத்தத்திற்கு செவிகொடுப்பதுதான். அவைகளின் கால்கள், இறக்கையோடு உரசும் ஒலி கேட்டு எல்லாம் ஒன்றுபோல் எழும்பிப் பறக்கின்றன. அவை, தன்னுடைய சுய விருப்பத்தை விரும்புவதில்லை.

நீங்கள், கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து, அவர் பார்வைக்கு செம்மையானவைகளை செய்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நிச்சயம் கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

"நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப் பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்" (யாத். 15:26).

தேவபிள்ளைகளே, நீங்கள் தேவனுக்கு முன்பாக பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாய் ஜீவிக்கும்போது, எக்காள சத்தம் தொனிக்கும்போது, இயேசுவின் வருகையில் மறுரூபமடைந்து, ஆகாயத்தில் ஒன்றுபோல் பறந்து செல்லுவீர்கள்.

நினைவிற்கு:- "மரித்தோர் தேவ குமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது’ (யோவான் 5:25).