ஞானமுள்ள சிலந்திப் பூச்சி!

"தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே" (நீதி.30:28).

மகா ஞானமுள்ள ஜெந்துவாக, சாலொமோன் ஞானி சிலந்திப் பூச்சியையும் குறிப்பிடுகிறார். இதன் காரணமென்ன? அது, அரசர் அரண்மனையில் போய், தன் கையினால் வலையைப் பின்னி, அதில் வசிக்கிறது. அவை, கீழானவைகளை நோக்கிப் பார்க்கவில்லை. "ராஜ அரண்மனையில் வசிக்க வேண்டும்" என்ற, ஒரு வாஞ்சை அதற்கு இருந்ததினால்தான், தன் வலையைப் பின்னி, ராஜ அரண்மனையில் வசிக்கிறது.

இது எதைக் குறிக்கிறது? ஜெயங்கொண்டவர்களாய், பரலோகத்தில் ராஜாதி ராஜாவின் அரண்மனையில், தங்கள் நித்திய வாசஸ்தலங்களைக் கட்டியெழுப்பும் பரிசுத்தவான்களைக் குறிக்கிறது.

ஏசாவும், யாக்கோபும் சகோதரர்கள்தான். ஏசாவின் கண்கள் சாதாரணமானவைகளின்மேல் திருப்திபட்டு விட்டது. ஒருவேளை போஜனம் இருந்தால் போதும் என்று எண்ணி மேலானவைகளை அசட்டை பண்ணினான். ஆனால் யாக்கோபோ, அப்படியல்ல, மேலானவைகளை நாடி, அதற்காக எந்த தியாகமும் செய்ய தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான்.

உங்களுடைய கண்கள் இந்த சிலந்திப் பூச்சியைப்போல, எப்போதும் மேலானவை களையே நாடித் தேடுவதாக இருக்கட்டும். உலகம், மாம்சம், இச்சைகளில் விழுந்து, மாணிக்கமாகிய கிறிஸ்துவை, நீங்கள் இழந்துபோய்விடக்கூடாது. பரலோக சந்தோஷங்களை இழந்துபோய் விடக்கூடாது.

அப். பவுல் சொன்னார், "நீங்கள் கிறிஸ்துவுடன் எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்" (கொலோ. 3:1).

தாவீது ராஜா, உலக வாழ்க்கையிலே மிக மேன்மைகளைக் கண்டிருக்கக்கூடும். பல யுத்தங்களில், ஜெயத்தைக் கண்டிருக்கக்கூடும். பல கிரீடங்களைப் பெற்றிருக்கக்கூடும். ஆனாலும் அவை எல்லாவற்றைப் பார்க்கிலும், கர்த்தரையே அவர் மேன்மையாகக் கண்டார். தேவபிள்ளைகளே, உங்களுடைய மேன்மை என்ன? உலக ஆசை இச்சைகளா? சிற்றின்பங்களா? அல்லது பரலோக மேன்மையா?

நீங்கள் பூமியிலே வாழ்ந்தாலும், பரலோகத்திலே உங்கள் நித்திய வீட்டை கட்டியெழுப்ப முடியும். கர்த்தர் பரலோக சுதந்தரங்களை உங்களுக்காக வைத்திருக்கிறார். இயேசு சொன்னார், "பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" (மத். 6:20,21).

நீங்கள் பூமியில் கர்த்தருக்காக கொடுக்கும் ஒவ்வொரு காணிக்கைகள், சம்பாதிக்கும் ஆத்துமாக்கள், செய்யும் ஊழியங்கள் ஒவ்வொன்றின் மூலமாகவும் நித்திய வீடு உங்களுக்காக பரலோகத்தில் கட்டப்படுகிறது. வேதம் சொல்லுகிறது, "பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்" (மத். 18:18).

சிலந்தியின் நெசவுகள், வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல (ஏசா. 59:6). தன் பெலவீனமான நூல்களாலே, பெலமுள்ள அரண்மனையில் தன் வாசஸ்தலத்தைக் கட்டி எழுப்புகிறது. அந்த நித்திய மகிழ்ச்சி உங்களுக்கும் வேண்டாமா?

நினைவிற்கு:- "நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள் வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக். 16:9).