சோர்ந்து போகாதே!

"சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்" (ஏசா. 40:29).

பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனும், சோர்ந்துபோவது இயற்கை. சிலர், சரீரத்தில் சோர்ந்துபோகிறார்கள். சிலர் ஆவியிலும், ஆத்துமாவிலும் சோர்ந்துபோகிறார்கள். சோர்புகள் வருவதற்கு, அநேக காரணங்கள் உண்டு. ஆனால், நீங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேற வேண்டும் என்று வாஞ்சிக்கும்போதும், ஊழியம் செய்ய வேண்டும் என்று தீவிரிக்கும்போதும், எதிர்ப்புகளை நிச்சயமாய் சந்தித்தே தீர வேண்டும்.

உண்மையும் உத்தமமுமான ஊழியத்தை, பிசாசானவன் எதிர்த்தே நிற்பான். எதிர்ப்பு இல்லாவிட்டால், ஊழியத்தில் வளர்ச்சி இருக்காது, நீங்களும், தேவனுடைய வல்லமையை ருசிக்க முடியாது! சோர்பு வந்துவிட்டால், கூடவே கவலை, கலக்கம், பயம், பெலவீனம் தானாகவே வந்துவிடும்.

கடல் இருக்கிற வரைக்கும், அலைகள் இருக்கத்தான் செய்யும். சோதனைகளும் இருக்கும், சோர்வுகளும் ஏற்படும். கடலின்மேல் முன்னேறிச் செல்லும் கப்பல், புயலையோ, காற்றையோ, கடல் கொந்தளிப்பையோ பொருட்படுத்தாமல், முன்னேறிச் செல்லுவதுபோல, உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திலும், சோர்பு களை அகற்றி, முன்னேறிச் செல்ல வேண்டும்.

நெகேமியா, கர்த்தருடைய ஆலயத்தை எடுப்பித்துக் கட்ட ஆரம்பித்தார். கர்த்தர், அவரோடுகூட இருந்து ஊக்கப்படுத்தினார். நெகேமியாவோடுகூட சேர்ந்து, அநேகர் தியாகத்தோடும், ஜெபத்தோடும் ஆரம்பித்த அந்த வேளையில், சத்துரு எதிர்க்க ஆரம்பித்தான்.

ஆத்தும கொலை பாதகன்தான் "பிசாசு." ஆத்தும ஆதாயம் செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் சாத்தானின் எதிர்ப்புக்குள்ளாவது இயற்கைதானே! உங்களை பரியாசம் செய்வான். மற்றவர்களை தூண்டிவிட்டு, கீழ்த்தரமாக பேச வைப்பான். அதைரியப்படுத்துவான். உங்கள் ஊக்கத்தையும், உறுதியையும் தளர்த்த என்னென்ன வழிகளைக் கையாள முடியுமோ, அத்தனையும் செய்து பார்ப்பான்.

நெகேமியாவுக்கும் அதே நிலைதான் வந்தது. "அவர்கள் கட்டினாலும் என்ன? ஒரு நரி ஏறிப்போனால், அவர்களின் கல் மதில் இடிந்துபோகும்" என்று தொபியா பரியாசம் செய்தான். ராஜாவுக்கு அவதூறாய் நிருபம் எழுதினான். கொன்றுபோட வகைதேடினான்.

ஆனால், கர்த்தரோ நெகேமியாவுக்கு ஜெயத்தைக் கட்டளையிட்டார். அந்த இரகசியம் என்ன? "நாங்கள் எங்கள் தேவனை நோக்கி, ஜெபம்பண்ணி அவர்கள் நிமித்தம் இரவு பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்" (நெகே. 4:9).

வேதம் சொல்லுகிறது, "கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" (எபி. 12:1). ஆகவே, உங்களுடைய வாழ்க்கையிலும் சரி, ஊழியத்தின் பாதையிலும் சரி, என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதைக்குறித்து பயந்து, சோர்ந்துபோகாதிருங்கள். கர்த்தர் சோர்ந்து போகிறவரல்ல. உங்களுக்கு சத்துவத்தையும், பெலனையும் கொடுக்கிறவர்.

தேவபிள்ளைகளே, சத்துருக்களை மேற்கொள்ளுகிற அதிகாரத்தையும் வல்லமையையும், பெலனையும், சத்துவத்தையும், கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுவார். சோர்ந்து போகாதேயுங்கள்! கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தை கொடுத்து ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவை களெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" (சங். 34:19).