தாமதத்தின் ஆசீர்வாதம்!

"தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோம. 8:28).

திருநெல்வேலியிலுள்ள டோனாவூரில் தங்கி, மிஷனெரியாக ஊழியஞ்செய்த அருமை தாயார் கார்மைக்கேல் அவர்களைப் பற்றி, தெரியாமல் யாரும் இருக்க முடியாது. அவர்கள் சிறுவயதாயிருந்தபோது, தன் தாயின் கண்களைப் போல, தன் கண்கள் அழகிய நீலநிறமாய் இல்லையே என்ற கவலை, அவர்கள் உள்ளத்தில் ஏற்பட்டது. சிறுமியான கார்மைக்கேல் ஜெபத்தின்மூலம், தன் கறுப்பு விழிகளை நீலநிறமாய் மாற்றமுடியும் என்ற எண்ணத்தோடு, முழு இரவும் தொடர்ந்து ஜெபிக்கலானாள்.

அதிகாலையில் ஓடிப்போய் கண்ணாடி முன் நின்றபோது, பெருத்த ஏமாற்றமாயிருந்தது. கண்கள் நீலநிறமாய் மாறவில்லை. அடுத்த நாள், அதற்கடுத்தநாள் என்று, ஒவ்வொருநாளும் நீலநிறக்கண்கள் வேண்டுமென்று, தொடர்ந்து போராடி ஜெபித்துக்கொண்டேயிருந்தாள். கண்ணாடி முன் நின்று, துக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த அவளிடம் கர்த்தர் அன்பாக, "வேண்டாம் மகளே" என்று பேசினார்.

வருடங்கள் கடந்து போயின. கார்மைக்கேல் அவர்கள் மிஷனெரியாக இந்தியா வந்தபோது, இந்தியர்களின் கண்கள் கறுப்பாக இருந்ததைக் கண்டார்கள். அவர் களுக்கு ஒரே மகிழ்ச்சி. சிறு வயதில், தேவன் தன் ஜெபத்திற்கு பதில் அளிக்காததின் இரகசியத்தை, அன்றைக்கு அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

நம்மில் அநேகரும் இப்படித்தான், தேவனை ஒரு அடிமைபோல நினைத்துக் கொண்டு, தங்களுடைய சுய விருப்பத்துக்கு அவர் செவிகொடுத்து, செயலாற்ற வேண்டுமென்று எண்ணுகிறார்கள். தேவனுடைய சித்தம் என்ன? அவருடைய அநாதி தீர்மானம் என்ன? என்பதை அறிய, கர்த்தரிடத்தில் முழங்காலில் நின்று ஜெபிப்பதில்லை.

நீங்கள் தேவனை சுயநலத்திற்கு பயன்படுத்துவதை விட்டுவிட்டு, தேவனுடைய சித்தத்தைச் செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள். கர்த்தர் உங்களிடம், "மகனே, மகளே, நீ என்னை உன் சுயநலத்திற்காக பயன்படுத்த நினைக்காதே" என்று சொல்லுகிறார்.

"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசா. 55:8). தேவபிள்ளைகளே, தேவ வழிநடத்துதலுக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்போது பூரண சமாதானத்தோடிருப்பீர்கள்.

வேதத்தில் யோசேப்பு, தன் சகோதரர்களால் கைவிடப்பட்டார். போத்திபாரின் மனைவியால் அநியாயமாய் குற்றஞ்சாட்டி, சிறைச்சாலைக்குச் சென்றார். அப்போது, அவர் "ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டங்கள், பிரச்சனைகள், பாடுகள்? ஏன், கர்த்தர் எனக்கு இப்படி செய்தார்?" என்று மனம் வருந்தியிருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் அவருடைய வாழ்க்கை ஆசீர்வாதமாயிருந்தது. கர்த்தர் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாகவே செய்தாரென்பதை அப்போது புரிந்துகொண்டார்.

ஆகவே தேவபிள்ளைகளே, உங்கள் வேண்டுதலுக்கு கர்த்தர் பதில் தரவில்லையே என்று மனம் மடிந்து போகாதிருங்கள். தேவன் ஜெபத்திற்குப் பதில் தரவில்லை என்றாலோ, அல்லது தாமதமானாலோ, அதிலே தேவனுடைய நோக்கமும் அநாதி தீர்மானமும், பிற்காலத்தில், உங்களுக்கு அனுகூலமான ஆசீர்வாதமும் அமைந்திருக்கும் என்பதை, நீங்கள் மறந்து போகாதீர்கள்.

நினைவிற்கு:- செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமும் உள்ளவராயிருக்கிறாரே" (யாக். 5:11).