கிருபாதார பலி!

"நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே" (1 யோவா. 2:2).

ஒரு சகோதரி, வாழ்க்கையில் பல பிரச்சனைகளினால் நொந்துபோய், தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தாள். வீட்டிலுள்ள எல்லாரும் வெளியே போய்விட்ட பிறகு, தன் அறைக்குள் மண்ணெண்ணெய், தீப்பெட்டியோடு நுழைந்து, கதவை தாழிட்டுக்கொண்டாள்.

"இன்றுதான், என் வாழ்க்கையின் கடைசி நாள். என்னை யாரும் உண்மையாக நேசிக்கவில்லை. ஆகையினால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று ஒரு பேப்பரில் எழுதினாள்.

ஆனால், எங்கிருந்தோ ஒரு துண்டு பேப்பர், ஜன்னல் வழியாக பறந்து வந்து, அவள் முகத்தில் மோதியது. அதை அவள் திறந்து பார்த்தபோது, அது வேத புத்தகத்திலுள்ள ஒரு தாள். அதில் "நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே" (1 கொரி. 6:19,20) என்று எழுதப்பட்டிருந்தது.

அதை, அவள் பரலோகத்திலிருந்து தனக்காகவே கொடுக்கப்பட்ட செய்தியாகவே எண்ணினாள். அவளுடைய உள்ளம், கல்வாரியை கண்ணீரோடு நோக்கியது. நடுக்கத்தோடு முழங்காற்படியிட்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் சொரிந்தது. மிகப்பெரிய கிரயம் செலுத்தி, தன்னை நேசித்த கிறிஸ்து, கடைசி வரையும் தன்னை நேசிக்கிறவர் என்று, அவள் உணர்ந்துகொண்டாள்.

தேவபிள்ளைகளே, தற்கொலையின் எண்ணம், சத்துரு கொண்டு வருகிற ஒன்று. அப்படிப்பட்ட எண்ணம் உங்களுக்கு வருமாயின், அந்த எண்ணத்தை இயேசுவின் நாமத்தினால் கடிந்துகொள்ளுங்கள்.

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது" (1 யோவா. 4:10). இது அவருடைய மகா பெரிய கிருபையல்லவா?

வேதத்திலே எலியாவைப் பாருங்கள்! யேசபேலுக்குப் பயந்து, வனாந்தரத்தில் ஒரு நாள் பிரயாணம்போய், தான் சாக வேண்டும் என்று எண்ணி, ஒரு சூரைச் செடியின் கீழ் உட்கார்ந்தார். அவர் சொல்லுகிறார், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும். நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல.

அப்பொழுது, ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: "எழுந்திருந்து, போஜனம் பண்ணு என்றான்" (1 இரா. 19:4,5). அவன் எழுந்து போஜனம் பண்ணி, மறுபடியும் சூரைச்செடியின் கீழ் படுத்துக் கொண்டான். தேவதூதன் மீண்டும் தட்டியெழுப்பி, போஜனம் பண்ணு. நீ பண்ணவேண்டிய தூரம் வெகுதூரம் என்று சொல்லி, அவனை திடப்படுத்தினான்.

தேவபிள்ளைகளே, இக்காலத்துப் பாடுகளைக் குறித்து கவலைப்படாதிருங்கள். உங்களை நேசிக்க கர்த்தர் ஒருவர் இருக்கிறார். எவ்வளவு வேதனைகள் வந்தாலும், பாடுகள் பெருகினாலும் முழங்காற்படியிட்டு உங்களுக்காக கிரயம் செலுத்தின அன்பின் இயேசுவை நோக்கிப்பாருங்கள். நிச்சயமாகவே, அவர் இனிய கரம் உங்கள் கண்ணீரைத் துடைப்பார்.

நினைவிற்கு:- "ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும், உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்" (1 கொரி. 6:20).