கண்ணீரைத் துடைப்பார்!

"அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின" (வெளி. 21:4).

நம்முடைய தேவன் கண்ணீரைத் துடைப்பவர். "ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய்?" என்ற இயேசுவின் இனிய குரல், கல்லறையண்டை அழுது கொண்டிருந்த மகதலேனா மரியாளின் காதுகளில் ஒலித்தது. அவள் உயிரோடிருக்கிற தன் மீட்பரை முகமுகமாய்க் கண்டபோது, அவளுடைய கண்ணீரெல்லாம் மறைந்தது. "ஆ! எத்தனை மகிழ்ச்சி! எத்தனை ஆனந்தம்!"

ஒரு ஊரில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான பிரச்சனைகள், போராட்டங்கள், துயரங்கள். ஒருநாள், அவர் தன் துயரங்களையெல்லாம் கொட்டி அழுது தீர்த்துவிட வேண்டும் என்று எண்ணி, ஒரு குன்றின் மேல் ஏறி உட்கார்ந்து, அழ ஆரம்பித்தார். பல மாதங்கள், தொடர்ந்து அவர் அழுதபடியினால், கீழே இருந்த பள்ளத்தில் ஒரு கண்ணீர் குளமே உருவாயிற்று.

அந்தக் குளத்தைக் கண்ட கொக்கு, மைனா, அன்னப்பறவை போன்றவை அந்தக் குளத்தை "உண்மையான குளம்" என்று எண்ணி, நீந்திக் குளித்து மகிழ்ந்தன. எங்கிருந்தோ, நண்டுகளும், தவளைகளும் குளத்தை நோக்கி வந்து, பெரிய ஆர்ப்பாட்டம் செய்தன. குளத்தின் கரையிலே, அழகான பூஞ்செடிகள் உருவாயின. வண்ணத்துப் பூச்சி, வண்டு இனங்கள் மகிழ்ந்து களிகூர்ந்தன.

தன்னைச் சுற்றிலும் இன்பமயமான சத்தம் கேட்கிறதை அறிந்து, ஒருநாள் அந்த முதியவர் கண்களைத் திறந்தார். ஆச்சரியமாய் அந்தக் குளத்தையும், சுற்றிலும் அற்புதமான மகிழ்ச்சியையும் கண்டார். அவர் கண்ணீர் நின்று போயிற்று.

கண்ணீரின் நேரத்தில் உங்களுக்கு ஒரு ஆறுதலுண்டு. இயேசு கிறிஸ்து, உயி ரோடிருக்கிறபடியால் உங்கள் கண்ணீர், கவலை முற்றிலுமாய் மாற்றுவார். நீங்கள் இயேசுவை முகமுகமாய் தரிசிப்பீர்கள். "ஆமென்! இயேசுவே வாரும்" என்று அன்போடு அழையுங்கள்.

"சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்" (வெளி. 7:17). "அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கி விடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்" (ஏசா. 25:8).

யோபுவின் சோதனை, போராட்டம், இழப்பு நேரங்களில் ஆறுதல்படுத்த வேண்டிய அவருடைய சிநேகிதர்கள் பரியாசம் செய்தபோது, "வெந்தப் புண்ணில் வேலை பாச்சுவதுபோல" மிகவும் வேதனைப்பட்டார். அடிக்குமேல் அடி. சோதனைக்கு மேல் சோதனை. "பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்" என்று சொல்லுவதைப்போல ஆஸ்தியை இழந்து, பிள்ளைகளை இழந்து, சரீர ஆரோக் கியத்தையும் இழந்து தவித்த அவருக்கு, நிந்தையையும் பரியாசத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீரோடு கர்த்தரண்டை வந்தார்.

தேவபிள்ளைகளே, இதோ தேவனுடைய வாக்குத்தத்தம் உங்களுக்கு வருகிறது, "நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும் கூக்குரலின் சத்தமும் அதில் இனி கேட்கப்படுவதில்லை" (ஏசா. 65:19).

நினைவிற்கு:- "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்" (சங். 126:5).