உபகாரங்களை மறவாதே!

"என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் (கர்த்தர்) செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" (சங். 103:2).

தாவீது தன்னுடைய ஆத்துமாவோடுகூட பேசி, "என் ஆத்துமாவே, கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறந்து போய் விடாதே! அவைகளையெல்லாம் ஞாபகப்படுத்தி கர்த்தரை ஸ்தோத்திரிப்பாயாக!" என்று சொல்லுகிறார்.

ஒரு போர்வீரனுக்கு தீராத வியாதி இருந்தது. அவன் தாங்க முடியாத வேதனையினால் துடித்துக்கொண்டிருந்தான். அவன் யுத்தம் செய்ய, யுத்தக் களத்திற்குப் போவதுண்டு. அவனை யுத்தக்களத்தில் காண்கிறவர்கள், ஆச்சரியப்படுவார்கள். ஏனென்றால், யுத்தம் மும்முரமாய் நடக்கும்போது, முதலாவதாக நின்று ஆவேசமாக யுத்தம் செய்வான். எண்ணற்ற பகைவர்களை வெட்டி வீழ்த்துவான்.

மரணத்துக்குக்கூட அஞ்சாமல், பகைவர்களின் சேனைக்குள் பாய்ந்து யுத்தம் செய்வான். அவன் யுத்தம் செய்வதைப் பார்த்து, அவனோடுள்ள மற்ற வீரர்களும் தைரியமடைவார்கள். "நான், வியாதியால் சீக்கிரம் மரணமடையப்போகிறேன். அதை விட, யுத்தக்களத்தில் மரிப்பதே மேல்" என்று, அவன் துயரமாய் சொல்லுவான்.

அவனுடைய வீர, தீர செயலைக் கண்ட அரசன், அவனை தலைச்சிறந்த மருத்துவர்களிடம் அனுப்பி குணமாக்கினார். அவனுடைய வைத்திய செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொண்டார். "வியாதியோடிருக்கும்போது, இந்த வீரன் இவ்வளவு சிறப்பாக யுத்தஞ்செய்கிறானே, இவனை குணமாக்கிவிட்டால், இன்னும் மேன்மையாக யுத்தம் செய்வானே" என்று அரசர் எதிர்பார்த்தார்.

ஆனால் அவனோ, அரசன் செய்த நன்றியை மறந்துவிட்டான். அதன்பின், அவன் யுத்தக்களத்திற்கு வரவேயில்லை. அவன் சொன்னான்: "வியாதியின் வேதனை தாங்க முடியாமல், அந்த வேதனையை மறப்பதற்காகத்தான் வீராவேசமாக போர் புரிந்தேன். இப்போது நல்ல சுகமாகிவிட்டேன். நான் ஏன் என் உயிரை பணயம் வைத்து யுத்தம் செய்ய வேண்டும்?"

மோசே வயதான காலத்தில், இஸ்ரவேலருக்குக் கொடுத்த ஆலோசனை என்ன? தேவனாகிய கர்த்தரை மறக்காமல் எச்சரிக்கையாய் இரு. "நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாதே" (உபா. 8:11-16).

சிலர் ஏழ்மையாக இருக்கும்போது, பிரச்சனை இருக்கும்போது, கர்த்தரை நினைப்பார்கள். ஆனால் அந்தஸ்து, ஆஸ்தி பெருகும்போது, மனமேட்டிமையும் பெருமையும் கொண்டு, கர்த்தரை மறந்துவிடுவார்கள். அதனால் கர்த்தரால் அவர்களை மென்மேலும் ஆசீர்வதிக்க முடியாமல் போய்விடுகிறது. உபத்திரவங்களும், பாடுகளும் இருந்துகொண்டேயிருந்தால்தான், அவர்கள் கர்த்தரை இன்னும் அதிகமாய், நெருங்கி கிட்டிச் சேர முடியும்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் செய்த நன்மைகளையும், அவர் செய்த சகல உபகாரங்களையும், அவருடைய அன்பையும் அவர் வழிநடத்தி வந்த பாதைகளையும், கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே செய்த எண்ணற்ற அற்புதங்களையும் மறந்து போகாதிருங்கள்.

நினைவிற்கு:- "நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்" (சங். 119:67).