தாழ்மையின் மேன்மை!

"கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்" (சங். 138:6).

தாழ்மையின் ஆசீர்வாதங்களை, தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டீர்களென்றால், கர்த்தரிடத்திலிருந்து கிருபையை பெற்றுக்கொள்வீர்கள். தாழ்மையுள்ளவர்களை அவர் நோக்கிப் பார்க்கிறவர். மாத்திரமல்ல, தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையும் அளிக்கிறார்.

"இந்தியாவின் பிதா" என்று அழைக்கப்படுகிற, மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் பாருங்கள். அவருடைய தாழ்மை எத்தனை பெரியது! அவர் புற ஜாதியாராய் இருந்தபோதிலும்கூட, கர்த்தர் அவருடைய தாழ்மையை நோக்கிப் பார்த்தார். தேசத்திலே, அவரை உயர்த்தி ஆசீர்வதித்தார்!

ஒருமுறை மகாத்மா காந்தி, இந்தியாவின் தென்பகுதியிலே சுற்றுப்பிரயாணம் செய்தபோது, அங்கே ஏழ்மையின் அடித்தளத்தில் இருந்த ஏழை மக்களைக் கண்டார். அவர்களில் பெரும்பாலானோருக்கு, உடுக்க வஸ்திரம்கூட இல்லாமலிருந்தது. தானும், ஏழை மக்களோடு இணைந்து கொள்ள விரும்பிய அவர், அன்று முதல் தன்னுடைய விலையுயர்ந்த வெளிநாட்டு உடைகளை ஒதுக்கித் தள்ளினார்.

தாழ்மையான இந்திய உடைகளையே, அவர் அணிய தீர்மானித்தார். ஒரு பெரிய செல்வந்தரும், மிக அதிகமாய்ப் படித்தவரும், பல தேசங்களைச் சுற்றுப்பிரயாணம் செய்தவருமான அவர், தாழ்மையைத் தரிக்க சித்தமானார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை நோக்கிப் பார்க்க வேண்டுமா? கர்த்தருடைய கண்களில், உங்களுக்கு கிருபை கிடைக்க வேண்டுமா? தாழ்மையைத் தரித்துக்கொள்ளுங்கள். உலகமெங்கும் சுற்றிப் பார்க்கிற கர்த்தருடைய கண்கள், தாழ்மையுள்ளவர்களையே நோக்கிப் பார்க்கிறது. அதையே, கர்த்தர் உங்களிடத்தில் கேட்கிறார்.

வேதம் சொல்லுகிறது: "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?" (மீகா 6:8).

மனத்தாழ்மைக்கு ஒரு முன்னோடியை நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்றால், இயேசுகிறிஸ்துவையே அல்லாமல் வேறொருவரையும் உங்களுக்கு முன்பாக நிறுத்த பிரியப்படவில்லை. அவருடைய தாழ்மை ஒன்றையே தியானித்துப் பாருங்கள். பிதாவுக்கு சமமாய் இருந்த மகிமையின் ராஜா, தாழ்மையை தரிக்க சித்தங்கொண்டதினாலே, "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்" (பிலி. 2:8).

எவ்வளவு தாழ்மையாய், மாட்டுக் கொட்டகையிலே அவர் பிறந்தார்! எவ்வளவு தாழ்மையாய், தச்சனுடைய வீட்டிலே வளர்ந்தார்! நரிகளுக்குக் குழிகள் இருந்தது; ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகள் இருந்தன. ஆனால், தம்மை தாமே தாழ்த்தின கிறிஸ்துவுக்கோ தலைசாய்க்க இடமில்லாதிருந்தது.

இரவல் படகில் நின்று பிரசங்கித்தார். இரவல் கழுதையின் மேல் பிரயாணம் செய்தார். இரவல் கல்லறையிலே அடக்கம் பண்ணப்பட்டார். எத்தனை எளிய வாழ்க்கையை, அவர் தாழ்மையாக வாழ்ந்து காண்பித்தார்! தேவபிள்ளைகளே, தாழ்மையை தரித்துக்கொள்ளுங்கள்!

நினைவிற்கு:- "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்" (யாக். 4:10).