ஆவியின் வரங்களும், கனிகளும்!

"அன்பை நாடுங்கள்; ஆவியின் ஞான வரங்களையும் விரும்புங்கள்" (1 கொரி. 14:1).

ஒன்பது விதமான ஆவியின் வரங்களைப் பற்றி, 1 கொரி. 12:8-10 வரை வாசிக்கலாம். ஞானத்தைப் போதிக்கும் வரம், அறிவை உணர்த்தும் வரம், விசுவாச வரம், குணமாக்கும் வரம், அற்புதங்களை செய்யும் வரம், ஆவிகளைப் பகுத்து உணரும் வரம், பற்பல பாஷைகளைப் பேசும் வரம், வியாக்கியானம் பண்ணும் வரம் போன்றவை!

ஆவியின் வரங்கள் ஒன்பது இருப்பதைப்போலவே, ஆவியின் கனிகளும் ஒன்பது இருக்கின்றன. அன்பு, சந்தோஷம் சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், என்பன (கலா. 5:22).

இந்த வரங்களையெல்லாம், தேவன் உங்களுக்குத் தரும்படியே வைத்திருக்கிறார். ஆவியின் அபிஷேகம் பெறாமல், ஆவியின் வரங்கள் கிரியை செய்யாது. ஆவியின் கனிகளும் கிரியை செய்யாது. சிலர் ஆவியின் வரங்களைப் பெறுவதற்காக, இரவு பகலாக உபவாசிப்பார்கள், ஜெபிப்பார்கள். ஆனால், கனியுள்ள ஜீவியத்தையோ விட்டுவிடுவதால், ஏதோ, ஒரு பாவத்தில் விழுந்து பெயர் கெட்டு அவர்கள் ஊழியமே நாசம் அடைந்து விடுகிறது.

மறுபக்கத்தில் இன்னொரு கூட்டத்தார், ஆவியின் கனிகளை மட்டுமே விசேஷமாக்கி அன்பையே பற்றி பிடித்துக் கொண்டு, பரிசுத்த ஆவியினுடைய நிறைவையும் ஊழிய வரங்களையும் அசட்டை செய்வார்கள். ஆனால், உங்களுக்கு ஆவியின் வரங்களும் தேவை, கனிகளும் தேவை.

ஒரு பிரதான ஆசாரியனுடைய அங்கி, எப்படி காணப்பட வேண்டும்? என்பதைக் குறித்து தேவன் மோசேக்கு கட்டளைக் கொடுத்தார். "கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது" (யாத். 39: 26). "மணிகள்" என்பது ஒலிக்கக்கூடியது. அது "ஆவியின் வரங்களைக்" காண்பிக்கிறது. "மாதளம்பழம்" என்பது "ஆவியின் கனிகளைக்" காண்பிக்கிறது. ஆவியின் வரங்களும், ஆவியின் கனிகளும் இணைந்தே காணப்பட வேண்டும்.

1 கொரி. 12,13,14 ஆகிய மூன்று அதிகாரங்களையும் கவனித்துப் பார்த்தால், உங்களுக்கு ஒரு பெரிய உண்மை விளங்கும். அதில் 12-ம் அதிகாரமும், 14-ம் அதிகாரமும், ஆவியின் வரங்களைக் குறித்துப் பேசுகின்றன. நடுவிலே வைக்கப்பட்டிருக்கும் 13-ம் அதிகாரம் முழுக்க, முழுக்க அன்பைக் குறித்தும், மற்ற கனிகளைக் குறித்தும் பேசுகின்றது.

சிலரிடம், இயற்கையாகவே அன்பு காணப்படலாம். இயற்கையாகவே, இச்சையடக்கம் உள்ளவர்களாக, தயவுள்ளவர்களாக, இரக்கம் உள்ளவர்களாக விளங்கலாம். அப்படி இயற்கையான கனிகளை, நீங்கள் பல இந்து சகோதரர்களிடத்திலும், இஸ்லாமிய சகோதரர்களிடத்திலும் கண்டிருக்கக்கூடும்.

அநேகருக்கு ஆவியின் வரங்களிலிருந்தும், கனிகள் இல்லாததால் மனமேட்டிமையிலும், பெருமையிலும் விழுந்து போய் விடுகிறார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் ஆவியின் வரங்களோடு, கனிகளும் பெற்று, கர்த்தரை மகிமைப்படுத்துவீர்களா?

நினைவிற்கு:- "என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக" (உன். 4:16).