வேண்டுதல் செய்யுங்கள்!

"தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப் பண்ணுமாப்போலவும் பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும்" (ஏசா. 64:2).

"ஏசாயா" ஒரு மாபெரும் தீர்க்கதரிசி. ஏசாயாவின் மூலம், ஒரு எழுப்புதல் உண்டாக சித்தங்கொண்ட கர்த்தர், ஓரு தரிசனத்தை அவருக்குக் காண்பித்தார். "சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து என்னிடத்தில் பறந்து வந்து, என் வாயைத் தொட்டு, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான்" (ஏசா. 6:6,7).

ஏசாயா தீர்க்கதரிசி, ஒருநாள் கர்த்தரை தரிசிக்கிறார். பரலோகம் முழுவதும் பரிசுத்தத்தால் நிரம்பியிருந்தது. சேராபீன்களெல்லாம் "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்று, தங்களை மறைத்துகொண்டு கர்த்தரைப் போற்றிக் கொண்டிருந்தார்கள். சேராபீன்கள் பாவம் செய்யவில்லை. ஆனால், தேவனுடைய பரிசுத்தத்துக்கு முன்பாக, நடுக்கம் கொண்டவர்களாய் நின்றார்கள்.

ஆனால், தன்னை பரிசுத்தத்தினால் அலங்கரிக்காத ஏசாயா, தேவனை பார்த்த போது: "ஐயோ! அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள ஜனங்கள் மத்தியிலே வாசமாயிருக்கிறவன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை, என் கண்கள் கண்டதே" என்று கதறினார்.

பலிபீடத்தில் அக்கினித் தழல். ஆம், பலிபீடத்தின் அக்கினித்தழலால் நிரப்பப்பட்ட உதடுகள், எழுப்புதலை உண்டாக்கியே தீரும். ஏசாயா தன் உதடுகளிலும், கண்களிலும் உள்ள அசுத்தத்தை உணருகிறார். ஆனாலும் தான் அழைத்த அழைப்பை மறந்து, அசுத்தமுள்ள ஜனங்கள் மத்தியிலே வாசம்பண்ணி, தன்னை தீட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் தேவன் அவரை அழைத்ததினாலே, அவருடைய உதடுகளைப் பரிசுத்தப்படுத்த வேண்டுமென்றும், அவரைக் குறித்து இன்னும் அநேக தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டுமென்றும் விரும்பி, தேவன் அவருக்குத் தரிசனமானார். பின்பு, அவர் ஒரு மாபெரும் தீர்க்கதரிசியாய் மாறினார்.

நீங்கள் உங்களுடைய அழைப்பை மறந்து ஜீவித்தாலும், கர்த்தர் அதை மறந்து விடுகிறவரல்ல. "தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே" (ரோமர் 11:29). அவைகளை, நீங்கள் செயல்படுத்த உங்களுக்குள் பரிசுத்த அலங்காரம் மிகவும் அவசியம்.

பலிபீடம் சிலுவையையும், பரிசுத்தாவியின் அக்கினியையும் சுட்டிக் காட்டித் கொண்டே இருக்கிறது. இவை இரண்டும் உங்களுடைய உதடுகளில் இருந்தே தீர வேண்டும். உங்கள் உதடுகளை கல்வாரி நேசத்தினாலும், கல்வாரி அன்பினாலும் கல்வாரி தியாகத்தினாலும் நிரப்பிக்கொள்ளுங்கள்.

அப். பவுல் சொல்லுகிறார், "நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக" (கலா. 6:14).

தேவபிள்ளைகளே, உங்கள் உதடுகளில் அக்கினி இருந்தால், அபிஷேகம் பண்ணப்பட்ட தேவதூதர்களைக் கொடுத்து, தேசத்தில் எழுப்புதல் அக்கினியை இறக்க முடியும். நீங்கள் தேசத்தின் எழுப்புதலுக்காக மன்றாடுவீர்களா? (ஏசா. 64:2).

நினைவிற்கு:- "அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்" (ஏசா. 65:24).