தேவ பயத்தின் ஆசீர்வாதம்!

"கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்" (சங். 128:1).

சங்கீதம் 128-ஐ, எப்போதும் திருமண வைபவத்தில் வாசிப்பதைக் காணலாம். புது வீடுகளுக்கு குடும்பத்தோடு செல்லும்போதும், போதகர்கள் இந்த சங்கீதத்தை வாசித்து, ஆசீர்வதித்து அனுப்புவார்கள். ஒரு நல்ல குடும்பத்திற்கு, தேவன் அருளும் ஆசீர்வாதமாக இந்த சங்கீதம் விளங்குகிறது.

நல்ல குடும்பத்தின் இலக்கணம் என்ன? அங்கே, குடும்பத்தின் தலைவன் அன்புள்ளமும், பக்தியும் நிறைந்தவனாக இருக்க வேண்டியது அவசியம். அவன் கர்த்தருக்கு பயந்து, அவருடைய வழிகளிலே நடக்கிறவனாக இருக்கும்போது, அதுவே, அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

குடும்பத்தின் தலைவன், கர்த்தருக்கு பயப்படுகிறவனாய் இருக்கிறது மட்டுமல்லாமல், அவன் குடும்பத்திற்காக உழைக்கக்கூடியவனாகவும் இருக்க வேண்டும். இன்றைக்கு, அநேக குடும்பங்களிலுள்ள ஆண்கள், உழைப்பதற்கு பிரியப்படாமல், மனைவி உழைக்க வேண்டும். மனைவி, மாமனார் வீட்டிலிருந்து பணம், பொருட்களைக் கொண்டு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

தனக்கு, ஒரு சிறிய தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் அல்லது ஸ்கூட்டர், கார் போன்றவைகள் வாங்க வேண்டுமென்றாலும், உடனே மனைவியை மாமனார் வீட்டிற்கு அடித்து விரட்டி, அங்கேயிருந்து "வாங்கிக் கொண்டு வா" என்று அனுப்புகிறார்கள். இது, எத்தனை அவலட்சணமான ஒரு காரியம்?

கர்த்தருக்கு பயப்படுகிற ஒவ்வொரு மனுஷனும், தனக்காகவும், தன் மனைவி பிள்ளைகளுக்காகவும் உழைக்க தீர்மானிப்பான். அப்பொழுது, கர்த்தர் அந்த பிரயாசங்களையெல்லாம் ஆசீர்வதித்து, உயர்த்த ஆவலுள்ளவராய் இருக்கிறார். அதை விட்டு விட்டு, மாமனாரிடம் அடித்து பறித்து, வயதான காலத்தில் அவர்களுடைய இருதயத்தை வேதனைப்படுத்துவது, ஒருக்காலமும் ஆசீர்வாதமாகவே இருக்காது.

ஒரு சகோதரி, "ஐயா, என் கணவனுக்கு வீட்டைப் பற்றிய ஒரு பொறுப்புணர்ச்சியே இல்லை. நான் ஏதாவது சொன்னால், உன் அப்பாவிடம் சென்று பணம் வாங்கி வா. நான் வியாபாரம் பண்ணப்போகிறேன்" என்பார்.

"பிள்ளைகள் படிக்கிறதா? இல்லையா? அவர்களுக்கு துணி இருக்கிறதா? இல்லையா? சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதைக் குறித்து, அவர் அக்கறைப்படுவதேயில்லை! என் கணவருக்கு, எப்போது குடும்ப பொறுப்புணர்ச்சி வரும்?" என்று, கண்ணீர் சிந்தினார்கள். பொறுப்பற்ற கணவனையும், பொறுப்புள்ளவராக மாற்றக்கூடியது மனைவியின் ஜெபம்தான். கர்த்தரால் மாற்றக்கூடாத மனிதன் ஒருவனுமில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு அருமையான சுவிசேஷகர் சொன்ன சாட்சியை, நான் மறப்பதில்லை. அவர் சொன்னார்: "நான் பொறுப்பற்றவனாய் நடந்த காலத்தில், துன்மார்க்கமாய் வாழ்ந்த காலத்தில், நடுச்சாமங்களில் என் மனைவி எழுந்து, என் கால்மாட்டின் அருகிலே உட்கார்ந்து, "ஆண்டவரே! என் கணவனை சந்தியும்" என்று ஜெபித்ததை என்னால் மறக்கவே முடியாது. அந்த ஊக்கமான ஜெபம், என்னை சந்தித்தது. கர்த்தர் என்னை இரட்சித்தார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால், அவருடைய மகிமையான ஊழியத்திற்கு என்னை அழைத்தார். என் மனைவியின் ஜெபமே, மிருகமாய் இருந்த என்னை மனிதனாக்கிற்று" என்றார். தேவபிள்ளைகளே, இல்லறத்தை நல்லறமாக்குவீர்களாக!

நினைவிற்கு:- "உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப் போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்" (சங். 128:3).