சீயோனின் ஆசீர்வாதங்கள்!

"வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக" (சங். 134:3).

"ஆசீர்வாதம்" என்ற சொல் எத்தனை இனிமையானது! எல்லாருக்கும் தாங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்ற எண்ணமுண்டு. பெற்றோரின் ஆசீர்வாதத்திற்காக பிள்ளைகள் ஏங்குகிறார்கள். ஆசிரியர்கள், பெரியவர்கள், மேன்மக்களுடைய ஆசீர்வாதத்திற்காக எதிர்பார்க்கிறார்கள். அதே நேரம், கர்த்தருடைய ஊழியக்காரரின் ஆசீர்வாதமும் உங்களுக்குத் தேவை.

சங்கீதத்தில் பல இடங்களில், சீயோனின் ஆசீர்வாதங்களைக் குறித்து காணலாம். மேலே சொன்ன வசனத்தை வாசித்துப் பாருங்கள். அது, கர்த்தரால் சீயோனிலிருந்து வருகிற ஆசீர்வாதத்தைக் குறித்து பேசுகிறது. "வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர், சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக" என்று சொல்லி தாவீது ஆசீர்வதிக்கிறார்.

சங். 128:5-ஐ வாசித்துப் பாருங்கள். "கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்" என்று எழுதப்பட்டிருக்கிறது. சீயோனிலிருந்து வரும் உன்னதமான ஆசீர்வாதங்களுமுண்டு. அதே நேரத்தில், இம்மைக்குரிய உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுமுண்டு.

உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைக் குறித்து, உபாகமம் 28-ம் அதிகாரம் 1-14 வசனங்களில் வாசிக்கலாம். "உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருக ஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்" என்றெல்லாம், வரிசையாக அந்த ஆசீர்வாதங்களைக் காண முடியும்.

அதே நேரத்தில், சீயோனுக்குரிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் உங்களுக்கு உண்டு. அவை என்ன? முதலாவது சீயோனிலிருந்து உங்களுக்குக் கிடைக்கிற இரட்சிப்பின் சந்தோஷம். இயேசு உங்களுடைய பாவங்களை மன்னித்தார். சாபங்களை முறித்தார், தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்தைத் தந்தார் என்று உணரும்போது, அது உங்களுக்கு பெரிய ஆசீர்வாதமாய் இருக்கிறது. பாதாளத்தின் வல்லமையிலிருந்து விடுபட்டு, பரலோக பாதையில் செல்லுகிறீர்கள் என்கிற உணர்வு, எத்தனை பெரிய பாக்கியமான ஆசீர்வாதம்.

இரண்டாவதாக, சீயோனின் ஆசீர்வாதங்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மிக முக்கியமானது. பிதாவின் சிங்காசனத்திலிருந்து, ஜீவ தண்ணீருள்ள ஆவிக்குரிய பரிசுத்த ஆவியானவர் இறங்கி, உங்கள் ஆத்துமாவை நிரப்புவது எத்தனை மகிழ்ச்சியான காரியம்! உன்னத பெலன் உங்களுக்குள் வருகிறது. ஜீவ ஆவி உங்களுக்குள் ஊற்றப்படுகிறது. கிறிஸ்துவின் வரங்கள், உங்களுக்குள் கிரியை செய்ய ஆரம்பித்து விடுகிறது. ஆவியின் கனிகளெல்லாம் காணப்படுகிறது. இது உன்னத ஆசீர்வாதம் அல்லவா?

இந்த சீயோனின் ஆசீர்வாதங்கள் மாத்திரமல்லாமல், இன்னும் உங்களுக்கு நித்திய ஜீவனுண்டு. தேவ சமாதானமுண்டு. தேவதூதர்களின் ஒத்தாசையுண்டு, பரலோக சந்தோஷமுண்டு. தேவபிள்ளைகளின் ஐக்கியமுண்டு. இவைகளெல்லாம் எத்தனை மேன்மையான ஆசீர்வாதங்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களினாலும் சீயோனுக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நிரப்பப்பட வேண்டுமென்பதுதான், தேவனுக்கு பிரியமும் சித்தமுமாயிருக்கிறது.

நினைவிற்கு:- "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவான் 2).