பலன் வரும்!

"உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாப் பலன் வரும்" (ஏசா. 61:7).

நீங்கள் எந்த அளவுக்கு உபத்திரவப்பட்டீர்களோ, அந்த அளவுக்கு கர்த்தர் உங்களை உயர்த்துவார். எந்த அளவுக்கு வெட்கமும், அவமானமும் அடைந்தீர்களோ, அதற்குப் பதிலாக, இரண்டத்தனையாய் கர்த்தர் உங்களை மேன்மைப்படுத்துவார்.  ஜெர்மனி தேசத்தை சேர்ந்த (Reinhard Bonnke) ரெயினார்டு போங்கே என்ற சுவிசேஷகர் தியாகத்தோடு ஆப்பிரிக்கா தேசத்திற்கு ஊழியத்திற்கென போனார். அங்கே ஒரு பெரிய எழுப்புதலை உண்டாக்கினார். ஒருமுறை முப்பத்தையாயிரம் பேர் அமரக்கூடிய பெரிய சுவிசேஷ கூடாரம் ஒன்றை ஆயத்தம் செய்தார். அவ்வளவு பேருக்கும் ஒரே நேரத்தில் சுவிசேஷத்தை அறிவிக்கக்கூடிய சகல வசதிகளும் அதில் செய்யப்பட்டிருந்தன.

அதை பிரதிஷ்டை செய்யும் நாள் நெருங்கியது. அதற்கு முந்தின இரவு திடீரென்று எழுந்த பயங்கரமான புயல்காற்று அந்த கூடாரத்தைக் கிழித்தெறிந்தது. அதைக்கண்ட எல்லோரும் அவரைப் பரியாசம் பண்ண விரும்பி, "உம்மோடு கர்த்தர் இருந்தால் இது நேரிடுமா?" என்று கேலி பேசினார்கள்.

 அவர் அந்த கூடாரப் பிரதிஷ்டையைக் குறித்து விளம்பரம் செய்திருந்ததினால், ஏறக்குறைய எழுபத்தையாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கே வந்தார்கள். அவர் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு ஜனங்கள் குவிந்தார்கள். கர்த்தர் பெரிய அறுவடையைத் தந்தார். பெரிய எழுப்புதல் உண்டாயிற்று. அப்போதுதான் அந்த பக்தன் அந்த கூடாரம் கிழிந்து போவதற்கு ஏன் கர்த்தர் அனுமதித்தார் என்பதை அறிந்துகொண்டார். மட்டுமல்ல, அந்த கூடாரம் கிழிந்து போயிருந்ததை ஜனங்கள் கண்டபோது, அந்த கூடாரத்தை மீண்டும் அமைப்பதற்கென்று உற்சாகமாய் காணிக்கை கொடுத்து, அதைவிடப் பெரிய கூடாரத்தை அமைக்க உதவி செய்தார்கள். "உங்கள் வெட்கத்திற்கு பதிலாக இரண்டத்தனையான பலன்வரும்" என்று கர்த்தர் சொன்னது எத்தனை உண்மையானது!

 தேவபிள்ளைகளே, சத்துருக்கள் உங்களை பரியாசம் பண்ணும்படி கர்த்தர் ஒருபோதும் ஒப்புக்கொடுப்பதில்லை. உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக கர்த்தர் உங்கள் தலையை உயர்த்தி எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுவார்.

 வேதத்தில், துஷ்ட ஆமான் தேவ ஜனங்களை வெட்கப்படுத்தும்படி, யூதரை அழிக்கும்படி சதி செய்தான். மொர்தெகாயை அனாவசியமா பகைத்தான். முடிவில், மொர்தெகாக்கு வெட்கத்திற்கு பதிலாக இரண்டத்தனையான பலன் வந்தது. அதே நேரம், துஷ்ட ஆமான் தூக்கிலிடப்பட்டு மரிக்க வேண்டியதாயிற்று.

 தேவபிள்ளைகளே, நீங்கள் வெட்கத்துக்குள்ளாகியிருக்கிறீர்களா? நிந்தைகளையும், அவமானத்தையும் அடைந்திருக்கிறீர்களா? கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை பற்றிக்கொண்டு இரண்டத்தனையான பலனை கர்த்தரிடத்தில் கேளுங்கள். நிச்சயமாகவே உங்கள் வெட்கத்திற்கு பதிலாக இரண்டத்தனையான பலன் கிடைக்கும். 

நினைவிற்கு:- "இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்" (சகரியா 9:12).