பலப்படுத்துவேன்!

"...நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்" (ஏசா. 41:10).

நீங்கள் பலப்பட வேண்டியது அவசியம். கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் மிகவும் அதிகமாய்த் திடப்பட வேண்டியது அவசியம். "நான் உன்னைப் பலப்படுத்துவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சிறு பிள்ளைகளுக்கு ஜுரம் வந்து பெலவீனப்பட்டு போனால், பெற்றோர் அந்தப் பிள்ளைகளை பலப்படுத்த பலவகையான சூப்புகளை தயாரித்துக் கொடுப்பார்கள். இன்னும் ஹார்லிக்ஸ், போர்ன்வீட்டா, வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள். தங்களுடைய பிள்ளைகள் பலசாலிகளாகவும், ஆரோக்கியமுள்ளவர்களாகவும் வாழ வேண்டுமென்பதே அவர்களுடைய ஆவல். அப்படியானால், பரம பிதா உங்களை பலப்படுத்தி, திடப்படுத்துவது எத்தனை உண்மையானது!

அநேகர் சரீரத்தில் பலமுள்ளவர்களாயிருந்தாலும், ஆத்துமாவிலே பலமில்லாதவர்களாய் இருக்கிறார்கள். குற்ற மனச்சாட்சி வாதிக்கிறதினாலே சாத்தானை எதிர்த்து நிற்க திடனற்றுப் போகிறார்கள். மாம்சத்தின் இச்சைகளை மேற்கொள்ள முடியவில்லையே, உள்ளத்தில் ஏற்படும் துர்ச்சிந்தனைகளை ஜெயிக்க முடியவில்லையே, நான் எங்கே ஊழியத்திற்குச் செல்லுவது, என்று சொல்லி பெலவீனப்பட்டு ஒடுங்கிப் போவிடுகிறார்கள்.

தாவீது சொல்லுகிறார், "என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று" (சங். 31:10). தனது பெலன் குன்றிப்போனதற்கு தனது "அக்கிரமமே" காரணம் என்பதை உணர்ந்தார்.

நீங்கள் கர்த்தருக்குள் பெலனுள்ளவர்களாய் வாழவேண்டுமென்றால், பாவத்தையும், துன்மார்க்கத்தையும் உங்களைவிட்டு அகற்றவேண்டும். பாவ பழக்கவழக்கங்கள் உங்களை மேற்கொள்ள விடாதிருங்கள். சிலர் தங்களைத் தாங்களே பெலவீனப்படுத்துகிறார்கள். சிலரை அசுத்த ஆவிகள் பெலவீனப்படுத்துகின்றன. இயேசு ஒரு ஸ்திரீயைக் கண்டார். அவள் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். வேதம் சொல்லுகிறது, "அப்பொழுது பதினெட்டு வருஷமாப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்" (லூக். 13:11).

அந்தப் பெலவீனப்படுத்தும் ஆவி அவளைப் பிடித்துக் கொண்டபோது, அவள் அந்த ஆவியை அதட்டவுமில்லை, கடிந்துகொள்ளவுமில்லை. பெலவீனப்படுத்தும் ஆவி தன்னை தாக்கியிருக்கிறது என்பதை அறியாமல் அதையும் தன் வாழ்க்கை முறையாய் ஏற்றுக்கொண்டாள். இதனால் அவள் பதினெட்டு வருடங்கள் பாடுபட வேண்டியதாயிற்று. பலவீனப்படுத்தும் ஆவி உங்களை தாக்கும்போது, அதைக் கடிந்துகொள்ளுங்கள். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலும், சாட்சியின் வசனத்தினாலும், அந்த ஆவியை மேற்கொள்ளுங்கள்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய சரீரத்தை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுங்கள். கர்த்தருடைய ஆவியானவர் உங்களை நிரப்பி அசுத்த ஆவியின் வல்லமையிலிருந்து விடுதலை தருவார். கர்த்தாவே என்னை பலப்படுத்தும் என்று உறுதியாய் ஜெபம் பண்ணுங்கள். அவர் உங்களை பலப்படுத்தி திடப்படுத்துவார்.

நினைவிற்கு:- "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்" (ஏசா. 40:29).