பத்து நீதிமான்கள்!

"...பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்" (ஆதி. 18:32).

சோதோம் கொமோரா பட்டணம் தேவனுடைய கோபாக்கினைக்கு, ஆளானது. அதனுடைய பாவம் மிகவும் கொடியதாய் இருந்ததினாலே கர்த்தர் நியாயத்தீர்ப்பை அந்தப் பட்டணத்தின்மேல் கொண்டுவரச் சித்தமானார்.

ஆபிரகாம் அந்தப் பட்டணத்திற்காக திறப்பின் வாசலில் நின்று, ஆண்டவரே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருக்கக்கூடும். "துன்மார்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதி சேயாதிருப்பாரோ" (ஆதி. 18:25) என்று மன்றாடினார். "அதற்கு கர்த்தர், நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலம் முழுவதையும் இரட்சிப்பேன் என்றார்" (ஆதி. 18:26).

ஆனால் அங்கே ஐம்பது நீதிமான்கள்கூட இல்லை. ஆபிரகாம், ஒருவேளை நாற்பத்தைந்து பேர் இருக்கக்கூடும். ஒரு வேளை நாற்பதுபேர் இருக்கக்கூடும். அதினிமித்தம் அழியாதிரும் என்று மன்றாடினார். ஆனால் அங்கே நாற்பது நீதிமான்களும் இல்லை. முப்பது நீதிமான்களுமில்லை. கடைசியாக கர்த்தர், பத்து நீதிமான்கள் இருந்தால்கூட நான் அதை அழிப்பதில்லை என்றார் (ஆதி. 18:32).

அந்தப் பட்டணத்தில் இருந்த ஒரே நீதிமான் லோத்து மட்டும்தான். அவனால் இன்னும் ஒன்பது பேரை கர்த்தர் பக்கம் சேர்த்து, பத்து நீதிமான்களாக்க கூடாமலிருந்தது. ஆத்தும ஆதாயம் செய்யாத அந்த லோத்து, பட்டணத்திற்கு வந்த அழிவைக் காணும்படியாக நேரிட்டது. நீங்கள் நீதிமான்களை உருவாக்குகிறவர்களாக இருங்கள். உங்கள் மூலம் அநேகர் கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவருடைய நீதிக்கு உடன் சுதந்தரராகட்டும்.

தேவபிள்ளைகளே, உங்கள் ஊர் உங்கள் பொறுப்பிலிருக்கிறது. அதை அழிவிலிருந்து பாதுகாக்க கர்த்தர் உங்களை உத்தரவாதியாக வைத்திருக்கிறார். உங்களுடைய வீட்டில் ஜெபக்கூட்டத்தை ஒழுங்கு பண்ணுவீர்களா அல்லது சுவிசேஷக ஊழியத்தை ஆரம்பிப்பீர்களா என்பது உங்கள் கையிலிருக்கிறது. பத்து நீதிமான்களாவது உங்கள் மூலமாக உருவாக்கப்பட வேண்டுமென்று இன்றைக்கு தீர்மானித்துவிடுங்கள்.

வேதத்திலே, நினிவே பட்டணத்திலே யோனா செய்த ஒரே பிரசங்கத்தினிமித்தம் ஒரு லட்சத்து இருபதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மனந்திரும்பினார்கள். அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனம் கசந்து அழுது கர்த்தருடைய முகத்தை நோக்கிப் பார்த்தார்கள். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவானாகிய யோனாவால் அத்தனை பேருடைய இருதயங்களையும் ஒரே நேரத்தில் கர்த்தரண்டை திருப்பிக் கொண்டு வர முடியுமென்றால், நிச்சயமாகவே அது உங்களாலும் முடியும்.

எஸ்தர் ஒரு பெரிய பிரசங்கியல்ல. சுவிசேஷகியுமல்ல. மூன்று நாட்கள் இரவும் பகலும் முழங்காற்படியிட்டு அவள் அத்தனை யூதரையும் அழிவிலிருந்து தப்புவித்தாள். தேவபிள்ளைகளே, உங்களுடைய முழங்காலின் பெலத்தை நீங்கள் இன்றைக்கு அறிந்துகொள்ளுங்கள். உங்கள் பட்டணத்தின் பொறுப்பு உங்கள் கையிலிருக்கிறது.

நினைவிற்கு:- "...நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" (யாக். 5:16).