பயமில்லாமல் போனதென்ன?

"...நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன" (எண். 12:8).

கர்த்தருடைய ஊழியக்காரர்களை நேசிப்பதும், அன்பு செலுத்துவதும், உபசரிப்பதும் உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். அதே நேரம், அவர்களுக்கு விரோதமாய்ப் பேசுவதும், எழுதுவதும் கர்த்தருடைய கோபாக்கினையையும், சாபத்தையுமே வரவழைக்கும்.

பழங்கால ரோம சாம்ராஜ்யத்தில், கர்த்தருடைய ஊழியக்காரர்களையும், விசுவாசிகளையும் சிங்கக்கெபிக்குள் போடுவது ரோம ராஜாக்களின் வழக்கமாயிருந்தது. கீழே விசுவாசியோ, அல்லது ஊழியனோ நின்று கொண்டிருப்பான். சிங்கங்கள் பாய்ந்து வரும்போது விசுவாசி அதைத் தடுக்க முயற்சிப்பான். சிங்கமோ, அவன்மேல் பாய்ந்து கூரிய நகங்களினால் கிழித்து இரத்த பெருவெள்ளத்திற்குள்ளாக்கி கடித்துக் குதறும். இந்த கோர காட்சியை எண்ணற்ற மக்கள் பார்த்து, ரசித்து மகிழுவார்கள்.

ரோம சாம்ராஜ்ய ராஜாக்களுக்கு தேவபயமில்லாமல் போனதினால், கர்த்தரால் கொடிய சாபம் அவர்கள்மேல் உண்டாகி ரோம சாம்ராஜ்யமே அழிந்தது. கர்த்தருடைய ஊழியக்காரர்களையும், விசுவாசிகளையும் கொடூரமாய் நடத்திய எல்லா ராஜாக்களும் பைத்தியக்காரராய், நிம்மதியற்று, தற்கொலை செய்துகொண்டு மரித்தார்கள். கர்த்தருடைய ஊழியக்காரர்கள்மேல் கை வைக்கிற ஒருவனும் தப்பிப்போவதில்லை.

இந்த ஆபத்தான விளையாட்டை ஒருநாள் மிரியாம் விளையாடினாள். மோசே தன் அண்ணன்தானே என்று எண்ணி மோசேக்கு விரோதமாய் பேச துணிகரங்கொண்டாள். "கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ" என்றாள் (எண். 12:2).

ஊழியக்காரனாகிய மோசேக்கு விரோதமாய் பேசப்பட்ட இந்த ஒரு வார்த்தையைக்கூட கர்த்தரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. கர்த்தருடைய கோபம் அவள் மேல் இறங்கியது. மிரியாம் உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டம் உடையவளானாள். இனி இந்த குஷ்டரோகியை யார் விரும்புவார்கள்? அவளுக்காக யார் பரிந்து பேசுவார்கள்? மோசேதான் அவளுக்காக பரிந்துபேச வேண்டியதாயிருந்தது. "...என் தேவனே அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்" (எண். 12:13).

தேவபிள்ளைகளே, உங்களுக்காக பரிந்து பேசுகிற ஊழியக்காரர்களை ஒருபோதும் அற்பமாய் எண்ணாதிருங்கள். அவர்களுடைய மனம் சோர்ந்து போக விடாதிருங்கள். அவர்களைக் குறை கூறியதினால் உங்களுடைய குடும்பத்திற்கு சாபம் வந்தது என்று கண்டால், அந்த ஊழியக்காரரிடம் போய் மன்னிப்புக்கேட்டு நல்மனம் பொருந்துங்கள். அவர் உங்களுக்காக கண்ணீரோடு விண்ணப்பம் செய்யும்போதுதான் உங்களுடைய சாபங்கள் நீங்கும்.

மிரியாம் துணிகரமாய் பேசினதினால் அவள் பாளயத்திற்கு புறம்பே விலக்கப்பட்டிருந்தாள். ஏழு நாட்கள் வெட்கமும் அவமானமும் அவளை சூழ்ந்து கொண்டது. (எண். 12:14). தேவபிள்ளைகளே, ஊழியர்களுக்கு விரோதமாய்ப் பேசுவது ஆபத்தானது என்பதை உணருங்கள்.

நினைவிற்கு:- "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்" (ரோம. 8:33).