பஞ்சம் இல்லை!

"கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மாவு செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெ குறைந்துபோவதும் இல்லை..." (1 இராஜா. 17:14).

தேசமெங்கும் பஞ்சம். சாரிபாத் விதவையோ அற்புதமாய் போஷிக்கப்பட்டாள். தேசமெங்கும் வறுமை. ஆனால் அவளுக்கோ வறுமையில்லை. தேசமெங்கும் பசி, பட்டினி. ஆனால், அவளோ நிறைவாயிருந்தாள். வேதம் சொல்லுகிறது, "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங். 34:10).

வேதத்திலே குறிப்பிடப்படும் சாரிபாத் ஊர், மழையில்லாமையால் ஒரு பஞ்சமான இடமாக இருந்துள்ளது. பஞ்சம் என்பது தேசத்தின் மேல் வருகிற ஒரு சாபமாகும். பஞ்சம் ஏற்பட்ட அநேக சந்தர்ப்பங்களை வேதத்தில் காணலாம். பஞ்சத்தினால் ஆபிரகாம் எகிப்து தேசத்துக்கும், ஈசாக்கு கேரார் பட்டணத்திற்கும் போக வேண்டியதாயிற்று (ஆதி. 12:10, 26:1). யாக்கோபின் குடும்பம் எகிப்துக்கும், நகோமியின் குடும்பம் பெத்லகேமிலிருந்து மோவாபுக்கும் வாழ்வாதாரம் தேடிப் போக வேண்டியதாய் இருந்தது.

ஜனங்கள் ஊர் விட்டு ஊர் ஓடிக்கொண்டிருக்கும் போது, எங்கே தானியம் கிடைக்கும், எங்கே கோதுமை கிடைக்கும் என்று அலைந்து கொண்டிருக்கும்போது, சாரிபாத் விதவையோ சோந்த ஊரிலே நிம்மதியாய் இருந்தாள். அவளிடம் இருப்பது கொஞ்சம் மாவும் கொஞ்சம் எண்ணெயும்தான். ஆனால், அதைப் பார்க்கிலும் மேன்மையான ஒன்று அவளிடத்தில் இருக்கிறதைக் கர்த்தர் கண்டார். அது கர்த்தருடைய ஊழியக்காரர்களைப் பராமரிக்கிற உதாரத்துவமான குணம். தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் திருப்தியாயிருக்கவேண்டும் என்பது அவளுடைய நோக்கம், விருப்பம். அதுவே அவளுடைய ஆசீர்வாதத்தின் இரகசியம்.

"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்" (லூக். 6:38) என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆகவேதான் தீர்க்கதரிசியாகிய எலியா அவளிடம் வந்து முதலாவது எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டு வா. பின்பு உனக்கும், உன் மகனுக்கும் பண்ணலாம் என்று சொன்னபோது, அவள் எலியாவின் சொற்படி செய்தாள்.

அவள் தனது தாராளத்திலிருந்தோ, மிச்சம் மீதியிலிருந்தோ கொடுக்கவில்லை. தன் வறுமையின் அடித்தளத்திலிருந்து கர்த்தருக்கென்று மனப்பூர்வமாக் கொடுத்தாள். ஒருவேளை கர்த்தர் அற்புதத்தைச் செய்யாவிட்டால் அவளும், அவளுடைய பிள்ளையும் மரித்துப் போயிருந்திருக்கக்கூடும். தான் மரித்தாலும் பரவாயில்லை. கர்த்தருடைய ஊழியக்காரன் புசித்து திருப்தியாயிருக்க வேண்டும் என்பதே அவளுடைய நோக்கமாயிருந்தது. தேவபிள்ளைகளே, நீங்களும் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் கொடுக்கும்போது, கர்த்தர் உங்களுக்கும் வானத்தின் பலகணிகளைத் திறப்பார், உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- "உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப் போகாதிருந்து, பஞ்சக்காலத்திலே திருப்தியடைவார்கள்" (சங். 37:18,19).