பலமாய் இறங்கினதினால்!

"அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் (சிம்சோன்மேல்) பலமாய் இறங்கினதினால்..." (நியா. 14:6).

சிம்சோன் என்ற வார்த்தை "செமிஸ்" என்னும் எபிரெய வார்த்தையிலிருந்து வந்தது. செமிஸ் என்ற சொல்லுக்கு "சூரியன்" என்று அர்த்தம். சிம்சோன் என்றால் "சின்ன சூரியன்" அதாவது "சூரியனின் மகன்" என்பது பொருளாகும். சிம்சோன் பிறப்பதற்கு முன்பாகவே அவனுடைய பெற்றோர் அவன் வல்லமையுள்ளவனாய் விளங்குவான் என்று சொல்லி சிம்சோன் என்ற பெயரைச் சூட்டினார்கள்.

சிம்சோனைக் கர்த்தர் அளவில்லாமல் நேசித்தார். அவனை நியாயாதிபதியாய் தெரிந்து கொண்டார். "கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்" (நியாய. 13:25) என்றும், "அவன்மேல் இறங்கினார்" (நியா. 14:19) என்றும், "அவன்மேல் பலமாய் இறங்கினார்" (நியா. 14:6) என்றும் வேதம் சொல்லுகிறது.

ஆவியானவர் பழைய ஏற்பாட்டு காலத்தில் இறங்கினதற்கும், புதிய ஏற்பாட்டு காலத்தில் இறங்குவதற்கும் பெரிய வித்தியாசமுண்டு. பழைய ஏற்பாட்டு காலத்தில் வல்லமையாய் கிரியையைச் செய்து முடித்தவுடன் அவர்களை விட்டு விலகிவிடுவார். பெலவீனத்தில் பெலன் கொள்ளுவார்கள். ஆனால் ஆவியானவர் விலகும்போது அவர்கள் சாதாரண மனுஷரைப் போல இருப்பார்கள். சிம்சோனைக் குறித்து பன்னிரெண்டு பெரிய வீரதீர செயல்கள் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் புதிய ஏற்பாட்டில் ஆவியானவர் வந்து போகிறவரல்ல. நிரந்தரமாய் உங்களோடு தங்கியிருக்கிறவர். உங்களுக்குள்ளே என்றென்றும் வாசம் பண்ணுகிறவர். இயேசு பரிசுத்த ஆவியானவரை வாக்குப் பண்ணினபோது, ‘என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளன்’ என்று குறிப்பிடுகிறார் (யோவா. 14:16). கவனியுங்கள், ‘என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படி’ என்று சொல்லுகிறார்.

உங்களோடு இருக்கிறவர் உங்களுக்குள் வாசம் செய்கிறார், உங்களுடைய சரீரம் ஆவியானவர் தங்குகிற வாசஸ்தலமாயிருக்கிறது (1 கொரி. 3:16). ஆவியானவர் உங்களுக்குள் தங்குகிறபடியினால் நீங்கள் உங்களுடைய ஆவி, ஆத்துமா சரீரத்தை எவ்வளவு பரிசுத்தமுள்ளதாய்க் காத்துக்கொள்ள வேண்டும்! இந்த மண்பாண்டங்களிலே மகிமையின் ஆவியானவர் தங்கியிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்! அவர் உங்களுக்குள்ளே வாசம் பண்ணி தெய்வீக சுபாவங்களை உங்களுக்குள்ளே கொண்டு வந்து உங்களை மறுரூபமாக்குகிறார்.

தேவபிள்ளைகளே, ஆவியானவரை நீங்கள் துக்கப்படுத்திவிடக்கூடாது. ஆவியை அவித்துப் போட்டுவிடக்கூடாது. ஆவியானவர் உங்களைவிட்டு விலகி விடக்கூடிய பாவங்களுக்குள் சிக்கி விடக்கூடாது. பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவி இறங்கி வந்ததினால் சிம்சோன் அத்தனை பெரிய வீரதீர செயல்களை செய்திருப்பாரென்றால், புதிய ஏற்பாட்டில் உங்களிலே தங்கியிருக்கிற ஆவியானவர் மூலமாய் எத்தனை அதிகமான காரியங்களை நீங்கள் செய்ய முடியும்! இயேசு சொன்னார்: "...என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்" (யோவா. 14:12).

நினைவிற்கு:- "நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்" (லூக். 24:49).