பனிக்கு ஒப்பாக!

"இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள் மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது" (சங். 133:1-3).

அதிகாலை வேளை புல்லின்மேல் திரண்டிருக்கிற பனித்துளிகள் குளிர்ச்சியாகவும், மிக அழகாகவுமிருக்கும். அது புத்துணர்ச்சியை உண்டாக்கும். சூரிய வெளிச்சத்தில் வானவில்லைப் போன்ற அழகான நிறங்களைக் காண்பிக்கும்.

கர்த்தர் சகோதர அன்பின் மேன்மையை, வானத்து பனித்துளிக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். சகோதர அன்பு உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலும் இறங்கி வருகிறதை நீங்கள் காணலாம். ஆரோனுடைய சிரசில் ஊற்றப்பட்ட அபிஷேகம் தலை வழியாக கீழாக இறங்கி, அவருடைய தாடியையும், வஸ்திரத்தையும் நனைத்தது. அதுபோலவே பனியானது, வானத்திலிருந்து இறங்கி எர்மோன், சீயோன் பர்வதங்களின் மேலும் இறங்கி வந்தது.

தேவபிள்ளைகளே, சகோதர அன்பு உயர்மட்டத்திலே நின்று விடக்கூடாது. கீழே இறங்கி வறுமையின் அடித்தளத்தில் வாழுகிறவர்களையும், விசுவாசத்தில் பெலவீனமுள்ளவர்களையும் நிரப்ப வேண்டும். அந்நியரும் பரதேசிகளுமாயிருக்கிற சகோதரர்களையும் அந்த அன்பின் அபிஷேகம் அரவணைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தின் தலைவன் மேல் அந்த அபிஷேகம் ஊற்றப்படும்போது, மனைவி பிள்ளைகள் மேலும், இனத்தவர்கள் மேலும் அது இறங்கி வருகிறது. தலையாகிய கிறிஸ்துவிலிருந்த அபிஷேகம் அவரது சரீரமாகிய மணவாட்டியின் மேலும் இறங்கிவரவில்லையா?

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒருமனப்பாட்டின் வாழ்க்கை ஆகும். அபிஷேகம் பெற்ற நான் தலையில்தான் இருப்பேன், தாடி வழியாய் இறங்கி வரமாட்டேன், அங்கிகளின் ஓரங்களுக்கு செல்லமாட்டேன் என்று சொல்ல முடியாது. அது தொடர்ந்து கீழே இறங்கி பரவக் கூடியதா இருந்தால்தான் அங்கே ஜீவனையும், ஆசீர்வாதத்தையும் கொண்டு வர முடியும். கிறிஸ்து இந்த தெவீக அபிஷேகத்தை உங்களுக்குக் கொண்டு வரும்படி பரலோகத்தைவிட்டு பூமிக்கு வந்தார். அவர் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார்.

இந்த பனித்துளி பரலோகத்திலிருந்து இறங்கி வருகிற பனித்துளி என்று வேதம் சொல்லுகிறது. கல்வாரியிலிருந்து இறங்கி வருகிற பனித்துளிதான் கிறிஸ்துவின் இரத்தம் என்கிற பனித்துளி. தம்முடைய சகோதரர்களுக்காக தம்முடைய இரத்தத்தையே பனித்துளி போல அவர் ஊற்றிக் கொடுத்தார்.

தேவபிள்ளைகளே, அந்த தியாகமும், பனித்துளியாகிய அவருடைய இரத்தமும் உங்கள்மேல் இறங்கும்போது, நீங்களும் அந்த அன்பை மற்றவர்களுக்கு வெளிப் படுத்திக் காண்பிக்க ஏதுவாயிருக்கும். இதுதான் கிறிஸ்தவ மார்க்கம் பலுகிப் பெருகுவதின் இரகசியம். "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்" (1 யோவா. 3:16).

நினைவிற்கு:- "நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது" (1 யோவான் 3:11).