பரிமள தைலங்கள்!

"உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்" (உன். 1:3).

"பரிமள தைலங்கள்" என்று குறிப்பிடப்படுவது, இயேசுவின் திவ்விய சுபாவங்களையேயாகும். இயேசுவின் குணாதிசயங்கள், சுபாவங்களெல்லாம் மிகவும் இனிமையானவை. இன்பமான வாசனையுடையவை.

கீலேயாத்தின் பிசின் தைலம் என்றால், அது இயேசுவினுடைய இரத்தத்திற்கு ஒப்புமையானது. போர்ச்சேவகன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினபோது, தைலம்போல தண்ணீரும், இரத்தமும் புறப்பட்டு வந்தன. குத்தப்படும்போது வெளிப்படும் தெவீக சுபாவம் எத்தனையா நம் உள்ளத்தை கவர்ந்து கொள்ளுகிறது!

இயேசுவை ஆணிகளாலும், ஈட்டியாலும் குத்தியபோது, அவர் சரீரத்திலிருந்து தூய்மையான இரத்தம் வழிந்தது; அது அன்பின் இரத்தம், தியாகத்தின் இரத்தம். வாயிலிருந்து அன்பின் வார்த்தைகள் வெளிவந்தது. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வேதம் சொல்லுகிறது. ஒரு மனிதனுடைய திவ்விய சுபாவங்கள் பாடுகளின் நேரத்தில்தான் வெளிப்படும்.

இயேசுவின் தலையிலே முள்முடி சூட்டப்பட்டு, சரீரமெல்லாம் சவுக்குகளினால் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டபோது, அவரிடத்திலிருந்து கோப வார்த்தைகள் வெளிவரவில்லை. அன்பின் வார்த்தைகள், மன்னிக்கும் வார்த்தைகள்தான் வெளிவந்தன. இயேசுவின் மீது துப்பினபோதும், அவரை கன்னத்தில் அறையும்போதும், தலையில் குட்டியபோதும், பரியாசம் பண்ணும்போதும் அவர் பொறுத்துக் கொள்ளாமல் வானத்திலிருந்து அக்கினியை இறக்கி இந்த அக்கிரமக்காரர்களை அழித்துப் போட்டுவிடும் என்று சொல்லியிருந்திருப்பாரேயானால் ஒரே நிமிடத்தில் எல்லாரும் சாம்பலா போயிருந்திருப்பார்கள்.

சோதோமை அழிக்க வானத்திலிருந்து அக்கினியை இறங்கப் பண்ணினவர், அவருடைய பகைவர்களையும் ஒரே வினாடியில் அழித்திருந்திருக்க முடியும். அப்படி அவர் அழித்திருந்திருப்பாரென்றால், அவருடைய திவ்விய சுபாவத்தை அறிந்து கொண்டிருக்க முடியாது. ஆனால் இயேசுவோ, அவர்களை மன்னியும் என்று பரிந்து பேசினார்.

"திவ்விய சுபாவம்" என்பது இருதயத்தின் அடித்தளத்திலிருந்து வருகிற அன்பின் சுரப்பிகளாகும். இயேசுவின் திவ்விய சுபாவங்கள் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தன.

"...உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத். 5:44) என்று பிரசங்கித்ததை வாழ்க்கையிலே நிறைவேற்றியும் காண்பித்தார். மலைப் பிரசங்கத்தில் சத்துருக்களைச் சிநேகியுங்கள் என்று சொன்னவர், கல்வாரிப் பாடுகளின் மத்தியில் அதை அனுபவத்தில் கொண்டு வந்தார். அதுதான் ஊற்றுண்ட பரிமள தைலம். தேவபிள்ளைகளே, உங்களுக்குள் அந்த தெவீக சுபாவங்கள் உருவாக உங்களை ஒப்புக் கொடுப்பீர்களா?

நினைவிற்கு:- "அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு..." (2 பேதுரு 1:3,4).