தெய்வீக சந்தோஷம்!

" என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்" (யோவான். 15:11).

இரட்சிப்பின் சந்தோஷத்துக்கு ஈடான சந்தோஷம், வேறொன்றுமில்லை. மிகுந்த துக்கத்தோடு வருகிறவர்கள், இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, ஆனந்தக் களிப்போடு நடனமாடி மகிழுகிறார்கள். வேதம் சொல்லுகிறது, "ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்" (யாக். 5:13).

சினிமா நடிகர், நடிகைகள் போலியான சந்தோஷத்தைக் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய உள்ளமோ, வெறுமையினாலும், வேதனையினாலும், நிரம்பி இருக்கிறது. ஆனால், கர்த்தர் கொடுக்கிற சந்தோஷமானது, பரலோக சந்தோஷம். இரவிலும் கீதம் பாடுகிற சந்தோஷம். இதனால்தான், பவுலும் சீலாவும் பாடுகளின் மத்தியிலும்கூட, சிறைச்சாலையிலே கர்த்தரை பாடித் துதித்தார்கள். இந்த நற்பொருளாகிய பரலோக மகிழ்ச்சியை, நீங்கள் காத்துக்கொள்ள வேண்டும்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய சமுகத்துக்கு வரும்போது, அவருடைய பாதபடியில் பேரானந்தம் இருக்கிறது என்பதை உணருவீர்கள் (சங். 16:11). அப்பொழுது முகமலர்ச்சியோடு அவரை, "அப்பா, பிதாவே" என்று அழைப்பீர்கள். நீங்கள் அனாதைகளல்ல, திக்கற்றவர்களல்ல. ராஜாதி ராஜாவினுடைய பிள்ளைகள் என்கிற சந்தோஷம் உங்களை நிரம்பி வழியப்பண்ணும்.

ஆபகூக் தீர்க்கதரிசி, "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்சேடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (ஆபகூக் 3:17,18) என்று சொன்னார்.

திராட்சரசமானது, மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்குகிறது (சங். 104:15). அது, கர்த்தர் தரும் தெய்வீக சந்தோஷமாகும். நீங்கள் எதிலே குறைவு பட்டாலும், கர்த்தருடைய மார்பிலே இனிதாய் சாய்ந்திருக்கிற சந்தோஷத்தில் குறைவுபடக்கூடாது. அந்த நற்பொருளைக் காத்துக்கொள்ளுங்கள்.

பாவம் செய்யும்போது, குற்ற மனச்சாட்சி வாதித்து, சந்தோஷத்தை எடுத்துப் போடுகிறது. விபச்சாரத்திலே கையும் களவுமாக பிடிக்கப்பட்ட அந்த பெண்ணின் பாவங்களை கர்த்தர் மன்னித்தபோது, "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே" என்றார் (யோவா. 8:11). அதுபோல, முப்பத்தெட்டு வருஷமாக பெதஸ்தா குளத்தண்டை படுத்திருந்த திமிர்வாதக்காரனை கர்த்தர் குணமாக்கினபின்பு, "இதோ, நீ சொஸ்தமானாய், அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்" (யோவான். 5:14).

தேவபிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்து, தெய்வீக சந்தோஷத்தை இழந்து விடாதிருங்கள். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த ஆனந்த தைல அபிஷேகத்தை நஷ்டப்படுத்திவிடாதிருங்கள். "உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்" (1 யோவான் 1:4).

நினைவிற்கு:- " உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார் களாக" (சங். 70:4).