உனக்குள்ளதை!

" இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாத படிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு" (வெளி. 3:11).

நீங்கள் பரலோக ராஜ்யத்தில் ராஜாக்களும், ஆசாரியர்களுமாயிருப்பீர்கள். ஆளுகையும், அதிகாரமுமுடையவர்களாயிருப்பீர்கள். "கிறிஸ்துவினுடைய சிரசின் மேல் அநேக கிரீடங்களிருந்தன" (வெளி. 19:12). உங்களுக்குத் தருவதற்காகவே, அவர் அத்தனை கிரீடங்களையும் வைத்திருக்கிறார். அவர் ஜீவ கிரீடம், வாடாத கிரீடம், மகிமையின் கிரீடம், நீதியின் கிரீடம், அழியாத கிரீடம், முத்து, மாணிக்கம், வைரகற்கள் பதிந்த கிரீடங்களையெல்லாம் உங்களுக்காக வைத்திருக்கிறார்.

நீங்கள் கர்த்தரிடத்திலிருந்து கிரீடத்தைப் பெற வேண்டுமானால், முடிவுபரியந்தமும் நிலைத்திருந்து, உங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். அப். பவுலின் சாட்சி என்ன? "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்" (2 தீமோ. 4:7,8).

பிலதெல்பியா சபைக்கு கர்த்தர், "நீ உண்மையாக இராவிட்டால் உன்னுடைய கிரீடத்தை வேறொருவனுக்குக் கொடுக்க வேண்டியது வரும்" என்று எச்சரித்தார். "சேஷ்டபுத்திர பாகமும்" ஒரு கிரீடம் போன்றதுதான். ஏசா அதை அற்பமாய் எண்ணி, வெறும் கூழுக்காக விற்றுப் போட்டபோது, சேஷ்டபுத்திரபாகமாகிய அந்தக் கிரீடம் யாக்கோபுக்கு வந்தது. சவுல் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனபோது, அந்தக் கிரீடம் தாவீதுக்கு வந்தது.

தாவீதின் மூத்த குமாரனாகிய அப்சலோமுக்கு வர வேண்டிய கிரீடம், சாலொமோனுக்கு போய் விட்டது. ஆகவேதான், தேவபிள்ளைகள் தங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுடைய அபிஷேகத்தில், உறுதியாய் நிலை நிற்க வேண்டியது அவசியம்.

ஆதாம், ஏவாளை கர்த்தர் மேன்மைப்படுத்தி, சகலவற்றையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, ஆளுகையையும், ராஜரீகத்தையும் கொடுத்தார். ஆனால் அவர் கள், அதை சாத்தானுக்கு விற்றுபோட்டபோது, அவர்களுடைய ராஜரீகம் அவர் களை விட்டு அகன்றது. சாத்தான், உலகத்தின் அதிபதியாய் மாறினான். ஆதாம், ஏவாளோ கிரீடத்தையும், மகிமையையும் இழந்து, நிர்வாணிகளாகப் பரிதாபமாய் நின்றார்கள்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற அபிஷேகம் விலை மதிக்க முடியாதது. அது, உங்களுக்கு ஒரு கிரீடம்போல விளங்குகிறது. எந்தவிதத்திலும் உங்களுக்கு அபிஷேகமாய் விளங்குகிற அந்தக் கிரீடத்தை, நஷ்டப்படுத்தி விடா திருங்கள். ஆரோனுடைய சிரசில், அந்த அபிஷேகம் ஊற்றப்பட்டபோது, அதுவே, அருமையான ஆசாரிய கிரீடமாக ஆரோனுக்கு விளங்கியது.

நீங்கள் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு வரும்போது, அதற்கென்று கர்த்தர் கொடுக்கிற அபிஷேகமே உங்களுக்குக் கிரீடமாக விளங்கும். ராஜாக்களின் அபிஷேகத்தை கர்த்தர் உங்கள்மேல் ஊற்றியிருக்கும்போது, நீங்கள் ஒரு அற்ப மனுஷனைப் போல, அயோக்கியமானதை செய்து கொண்டு திரியக்கூடாது. கர்த்தருக்கென்று முடிவு பரியந்தம் நிலைத்திருந்து, அந்த கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நினைவிற்கு:- " ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்" (வெளி. 2:10).