சுமக்கிறவர்!

"ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே" (உபா. 1:31).

கர்த்தர், உங்களை சுமந்துகொண்டு செல்லுகிற தேவன்! சிறு குழந்தைகளை, தகப்பன் தன் தோள்களின் மேல் ஏற்றி, சுமந்துகொண்டு போவதைப்போல, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும், சுமந்துகொண்டு செல்ல கிருபையுள்ளவராய் இருக்கிறார்.

இஸ்ரவேல் ஜனங்களைக் கர்த்தர், தகப்பன் பிள்ளையை சுமந்துகொண்டு போவதைப்போல, நாற்பது வருடங்கள் எகிப்திலிருந்து கானானுக்குள் சுமந்து கொண்டு போனார். சிறியவர்களும் பெரியவர்களுமாக இருபது லட்சம் பேருக்கு மேலாக கானானை நோக்கி பயணம் செய்தபோது, இலட்சம், இலட்சமான அந்த மக்களைச் சுமக்க கர்த்தருடைய தோள்கள் வலுவுள்ளதாக, கிருபையுள்ளதாக இருந்தது. அத்தனை மக்களுக்கும் அவர் வனாந்தரத்தில் உணவளித்தார், தண்ணீர் கொடுத்தார். வஸ்திரங்கள் பழையதாகி போகாதபடிக்குப் பாதுகாத்தார். அந்த தேவன் என்றென்றைக்கும் உங்களுடைய தேவனாயிருக்கிறார்.

தேவபிள்ளைகளே, இந்த கடினமான உலகத்தில் எப்படி முன்னேறிச் செல்வது என்று அறியாமல் அங்கலாக்கிறீர்களா? ஆனால் கர்த்தர், "பயப்படாதே, நான் உன் பரம தகப்பன். தகப்பன் தன் பிள்ளையை சுமப்பதைப்போல, நான் உன்னை தூக்கி சுமக்கட்டும்" என்று சொல்லுகிறார். வேதம் சொல்லுகிறது, "கழுகு தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, அவைகளை எடுத்துத் தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்" (உபா. 32:11,12).

ஆம்! கர்த்தர் உலகப்பிரகாரமாக மாத்திரமல்ல, ஆவிக்குரிய பிரகாரமாகவும் உங்களை சுமந்துகொண்டு செல்லுகிறார். பிலிப்பு, கந்தாகே நாட்டு மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்து கரையேறின பின்பு, ஆவியானவர் அவனைத் தூக்கிக் கொண்டு போனார் என்று, வேதம் சொல்லுகிறது. கழுகு செட்டைகளில் குஞ்சுகளைச் சுமப்பதைப்போல ஆவியானவர் தூக்கி சுமக்கிறார்.

பாருங்கள்! அப். யோவானை அவனுடைய விரோதிகளெல்லாம், "பத்மு" என்ற தீவில் தனிமையான சிறையிலடைத்தார்கள். அவர்களுக்கு பரம பிதாவின் அன்பு தெரியவில்லை. கழுகு செட்டைகளை விரித்து சுமப்பதைப்போல, கர்த்தருடைய பக்தனை சுமக்க தேவன் ஆவலுள்ளவராயிருக்கிறார் என்பதை, அவர்கள் அறிய வில்லை. என்ன நடந்தது? கர்த்தருடைய நாள் வந்தது. கர்த்தர் யோவானை ஆவிக் குள்ளாக்கினார். கழுகு போன்ற தேவனுடைய செட்டைகளின்மேல், கர்த்தர் அவரை சுமந்து, பரலோகத்திற்கு எடுத்து சென்றார்.

தேவபிள்ளைகளே, எல்லா பக்கமும் சோதனைகளும், போராட்டங்களும் வரும் போது, உங்களை சுமந்து செல்ல அன்புள்ள தகப்பன் ஒருவர் உண்டு என்பதை மறந்து போகாதிருங்கள். அவர் அன்போடு உங்களை தேற்றி, "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்" என்று சொல்லுகிறார் (யோவா. 14:1). மாத்திரமல்ல, "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன் என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று சொல்லி, சமாதானத்தை உங்களுக்குத் தருகிறார்.

நினைவிற்கு:- கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்" (ஏசா. 40:31).