உங்களோடிருப்பார்!

"ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்" (சங். 91:15).

வேதத்திலுள்ள எல்லா கர்த்தருடைய வாக்குத்தத்தங்களிலும் முக்கியமானதும், திரும்பத் திரும்ப வருகிறதுமான ஒரு வாக்குத்தத்தம், "நான் உன்னோடு இருப்பேன்" என்பதாகும். "ஆபிரகாமே, நான் உனக்கு மகா பெலனும், கேடகமுமாயிருக் கிறேன்." "யாக்கோபு" என்றும், "சிறுபூச்சியே, பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன்" என்றார். யோசுவாவைப் பார்த்து, "நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை" (யோசு. 1:5) என்றார்.

கர்த்தருடைய பெயர்களில் ஒரு பெயர், "இம்மானுவேல்" என்பதாகும் (ஏசா. 7:14). "இம்மானுவேல்" என்பதற்கு "தேவன் நம்மோடிருக்கிறார்" என்பது அர்த்தமாகும். அவர் ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒன்றிரண்டு வருடங்களல்ல. "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" (மத். 28:20) என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களோடிருப்பது உண்மையிலும் உண்மை. சத்தியத்திலும் சத்தியம். ஆனால், நீங்கள் கர்த்தரோடிருக்கிறீர்களா? அநேகர் கர்த்தர் வரவிரும்பாத இடங்களுக்குச் சென்று விடுகிறார்கள். மாம்ச இச்சைகளை விரும்பி, கர்த்தரை அசட்டையும், அலட்சியமும் செய்கிறார்கள்.

பாருங்கள்! நகோமிக்கு இரண்டு மருமக்களிருந்தார்கள். அதில் ஓர்பாள், நகோமியை முத்தம் செய்துவிட்டு, தன் தேசத்துக்கு திரும்பிப் போய்விட்டாள். ஆனால் ரூத்தோ, நகோமியை உறுதியாய்ப் பற்றிக் கொண்டாள். அவள்தான் ஆசீர்வாதத்தை சுதந்தரித்தாள்.

யோபுவுக்கு துயர நாட்கள் வந்தபோது, அவருடைய வேலைக்காரர்களும், இன ஜன பந்துக்களும் அவரை விட்டு தூரமாய் போய்விட்டார்கள். அதுதான் உலகத்தின் நிலை. நீங்கள் மகிழ்ச்சியோடிருக்கும்போது, உங்களோடு ஒட்டி, உறவாட ஆயிரம் பேர் வருவார்கள். ஆனால், உங்களுடைய துயரத்தை பகிர்ந்துகொள்ள ஒருவரும் முன் வரமாட்டார்கள். கர்த்தர் ஒருவர்தான், உங்களுடைய எல்லா நெருக்கங்களிலும் உங்களோடுகூட நெருக்கப்படுகிறவர் (ஏசா. 63:9).

அப். பவுல், சொல்லுகிறார்: "என் விசாரணை நேரத்தில் எல்லோரும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். நான் தனிமையாய் விடப்பட்டேன். ஆனால் கர்த்தர் என்னோடு இருந்தார்." எரேமியாவின் வார்த்தைகளும் அதுதான். "கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்" (எரே. 20:11).

இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்படும்போது, சீஷர்கள் சிதறிப் போய் விட்டார்கள். அவரிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுக் கொண்டவர்களில் ஒருவரும் அவரோடு இல்லை. எத்தனையோ குஷ்டரோகிகளை சுகமாக்கினார். எத்தனையோ குருடரை பார்வையடையச் செய்தார். எத்தனையோ சப்பாணிகளை எழுந்து நடக்கப்பண்ணினார். ஆனால், அவருடைய துயர நேரத்தில் அவருடைய வேதனைகளை பகிர்ந்து கொள்வதற்கு ஒருவருமில்லை. தேவபிள்ளைகளே, யார் உங்களை விட்டு விலகினாலும், ஓடிப்போய் விட்டாலும், கர்த்தரோ எப்போதும் உங்களோடிருப்பார்.

நினைவிற்கு:- "அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்" (சங். 91:14).