காண்கிறவர்!

"தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்" (ஆதி. 16:13).

பிரான்ஸ் தேசத்திலே கட்டப்பட்ட ஒரு பெரிய தேவாலயத்திலே, கானாவூரில் கர்த்தர் செய்த அற்புதத்தை சித்தரிக்கும் காட்சி ஒன்றை, பளிங்கு கற்களிலே செதுக்கும்படி, சிற்பி ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். அந்த சிற்பி, இரவும் பகலும் அந்த திருமணக் காட்சியையும், கற்ஜாடிகளையும் அந்தக் கல்லிலே செதுக்கினார். அந்த காட்சிகளெல்லாம், கல்லிலே செதுக்கப்பட்டதை அந்த சிற்பியின் மகன் கவனித்துக் கொண்டே இருந்தான்.

கடைசியில் சொன்னான்: "அப்பா, இந்தக் கற்ஜாடிகள் தேவாலயத்தின் இருபது அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. அவ்வளவு உயரத்தில், இந்த கற் ஜாடிகளை ஜனங்கள் யார் கூர்ந்து கவனிக்கப் போகிறார்கள்? நீங்களோ, மிக நுட்பமாக அதிகமான நேரம் செலவழித்து, இந்த கற்ஜாடிகளை செதுக்கிக் கொண்டிருக் கிறீர்களே, சாதாரணமாக செதுக்கியிருந்தால் போதுமே" என்று சொன்னான்.

அதற்கு அவனுடைய தகப்பன் மகனை தட்டிக்கொடுத்து, "மகனே, ஜனங்கள் பார்க்கிறார்களோ, பார்க்கவில்லையோ, எனக்கு காண்டிராக்ட் வேலையை தந்தவர்கள் கவனிக்கிறார்களோ இல்லையோ, ஆனால் என்னைக் காண்கிற தேவன் அதை காண்கிறார் என்று அறிவேன். ஆகவே, நான் எதைச் செய்தாலும் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாக செய்கிறேன்" என்று சொன்னார்.

கர்த்தருக்கு, "நீர் என்னைக் காண்கிற தேவன்" என்ற பெயரைச் சூட்டினது ஆகார் தான். அவள் ஒரு அடிமைப்பெண். ஒரு வீட்டின் வேலைக்காரி. ஒருவேளை அவளுடைய உள்ளத்தில், கர்த்தருடைய கண்கள் ஆபிரகாமை காணக்கூடும்; கர்த்தருடைய கண் சாராளின் மேல் நோக்கமாயிருக்கக்கூடும். ஆனால், "அவர் என்னைக் காண்பாரோ?" என்று எண்ணி இருந்திருக்கக்கூடும்.

ஆனால், கர்த்தருடைய கண் அவளையும் கண்டுகொண்டே யிருந்ததை, அவள் வனாந்தரத்தில்தான் அறிந்தாள். கர்த்தர், அவளுடைய சிறுமையைக் கண்டார். அவளுடைய அங்கலாப்பைக் கண்டார். அவளோடுகூட பேசி, சாராளிடத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தார். அவள் மிகுந்த சந்தோஷத்தோடு, "நீர் என்னைக் காண்கிற தேவன்" என்று சொல்லி, கர்த்தருக்கு பெயரிட்டாள்.

ஒரு வீட்டில் ஒரு சகோதரன், "நீர் என்னை காண்கிற தேவன்" என்கிற வசனத்தை, ஒரு பெரிய போர்டு ஒன்றில் எழுதி வைத்திருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் அந்த போர்டிலுள்ள வசனத்தைப் பார்க்கும்போதெல்லாம், அங்கே இருந்து கர்த்தருடைய கண்கள், அவரையே நோக்கிப் பார்ப்பதுபோல இருக்கும். கர்த்தருடைய கண்கள் தன்னை நோக்கிப் பார்க்கிறதினாலே, தனக்கு ஆசீர்வாதமும், தயவும், கிருபையும், கிடைக்கிறதாக அவர் எண்ணி, கர்த்தரை ஸ்தோத்தரித்தார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களைக் காண்கிறார். உங்களுடைய சிறையிருப்பை காண்கிறார். நீங்கள் ஒடுக்கப்படுகிறதைக் காண்கிறார். அநேக வேதனையை உங்களுக்குள்ளே அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறதை காண்கிற தேவன், உங்களுடைய எல்லாப்பிரச்சனைகளிலிருந்தும் உங்களுக்கு பரிபூரண விடுதலையைத் தரவும், உங்களை ஆசீர்வதித்து உயர்த்தவும் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.

நினைவிற்கு:- "தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது" (2 நாளா. 16:9).