சர்வ வல்லமையுள்ளவர்!

"நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமானா யிரு" (ஆதி. 17:1).

ஒரு நாள் கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமாகி: "நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. என் உடன்படிக்கையை உன்னோடு ஏற்படுத்தி, உன்னைத் திரளாப் பெருகப்பண்ணுவேன்" என்றார்.

"நான் சர்வ வல்லமையுள்ள தேவன்." இதை எபிரெய மொழியிலே, "எல்ஷடாய்" என்ற பதத்தில் காண்கிறோம். "எல்" என்பதற்குப் பராக்கிரமம் உடையவர் என்றும், "ஷடா" என்பதற்குத் "தாயைப் போன்ற மார்பையுடையவர்" என்றும் அர்த்தமாகும். உங்களை நேசிக்கிற தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வெகு தூரத்தில் அல்ல; உங்கள் அருகிலே தாயைப் போன்ற அன்புடையவராய் இருக்கிறார். தம்மை நேசிக்கிறவர்களைப் போஷிக்கிறார். வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார். ஜீவனையே தரவும் ஆயத்தமாயிருக்கிறார்.

"எல்ஷடாய்" என்ற பதத்திற்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டுமென்றால் "அன்புள்ள தாயும், வலிமையுள்ள தந்தையும் அவரே" என்பதாகும்! தாயின் குணாதிசயங்கள் எத்தனை விசேஷமானது! ஏசாயா 49:15 சொல்லுகிறது; "ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை". பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து பாலூட்டி, சீராட்டி வளர்க்கிற தாய் தன் பிள்ளையின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருப்பாள். ஒருவேளை உங்களுடைய தாய், உங்களை மறக்க இயலும். ஆனால், நான் உங்களை மறப்பதில்லை என்று சொல்லுகிறார்.

தாயினுடைய இன்னொரு குணாதிசயம் என்ன தெரியுமா? பிள்ளைகளை ஆற்றுவது, தேற்றுவது, அரவணைப்பது, ஆறுதல் செய்வது. கர்த்தர் சொல்லுகிறார்: "ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்" (ஏசா. 66:13). தாய் தன் மடியிலே பிள்ளைகளைக் கிடத்தி தேற்றும்போது, அந்தப் பிள்ளைக்குத் தான் எத்தனை ஆறுதல்! கவலைகளை மறந்து, தாயின் மடியிலே துயில் கொள்ளும். ஏசாயா சொல்லுகிறார்: "கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்னைத் தேற்றுகிறீர்" (ஏசா. 12:1). நீங்கள் தேற்றப்படுவீர்கள் என்று கர்த்தர் மீண்டுமாக, எசே. 14:22-ல் கூறுகிறதைப் பாருங்கள்.

அவர் நமக்குத் தாயாக மட்டுமல்ல, தகப்பனாகவுமிருக்கிறார். பெலமுள்ள தகப்பன். உபாகமம் 1:31 சொல்லுகிறது, "ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்து கொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிற வரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததைக் கண்டீர்களே".

தேவ பிள்ளைகளே, ஒவ்வொரு நாளும் அவர் தூக்கிச் சுமப்பார். உங்களுடைய பாரங்களைச் சுமப்பார். உங்களுடைய கவலைகளைச் சுமப்பார். இருதய வியாகுலங்களைச் சுமப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களையே அவர் சுமந்து செல்லுகிறார்.

நினைவிற்கு:- "கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்து கொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை" (உபா. 32:11,12).