அடைக்கலமானவர்!

"அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்" (உபா. 33:27).

அநாதி தேவனைப் பாருங்கள்! அவருடைய நித்திய புயங்களைப் பாருங்கள்! அவரைப்போல, உங்களுக்கு அடைக்கலமும், ஆதரவும் தருகிறவர் யாருமில்லை. ஆம், அவரே உங்களுக்கு என்றென்றுமுள்ள அடைக்கலமானவர்!

சிலர், தங்களுடைய அடைக்கலமாக மந்திரிகளையும், உலக மனிதர்களையும், போலீஸ் அதிகாரிகளையும் தேடுகிறார்கள். ஆனால் ஆட்சிகள் மாறும்போது, காலங்கள் உருண்டோடும்போது. அப்படிப்பட்ட எந்த அடைக்கலமும் நிலை நிற்பதில்லை. வியாதி நேரங்களில், அநேகர் ஆஸ்பத்திரிகளையே அடைக்கலமாக கொள்ளுகிறார்கள். பிரச்சனை நேரங்களில், வக்கீல்களையே அடைக்கலமாக எண்ணுகிறார்கள். ஆனால், தேவபிள்ளைகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் அநாதி தேவனே அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்களே ஆதாரம்.

அந்த அநாதி தேவன், தன்னுடைய அடைக்கலத்தை மோசேக்கு காண்பித்தார். மோசே, ஒரு கன்மலையை கண்டார். அது ஞானக் கன்மலை. நித்திய கன்மலை. அந்த கன்மலையிலே வெடிப்பு இருந்தது. கர்த்தர், அந்த வெடிப்பிலே அவனை வைத்து, தம்முடைய நித்திய புயங்களினால் மூடினார் (யாத். 33:22). அப்பொழுது மோசே, அந்த அடைக்கலத்தின் மேன்மையை கண்டுபிடித்தது மாத்திரமல்ல, கர்த்தருடைய மகிமையின் ஒரு பகுதியையும் தரிசித்தார்.

தாவீது எழுதுகிறார்: "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்ல வருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்" (சங். 91:1,2). தாவீது, தன் வாழ்நாளெல்லாம் அநாதி தேவனையே தன்னுடைய அடைக்கலமாகக் கொண்டார். தன்னுடைய சுய பெலத்தையோ, வில் வீரர்களையோ, இரதங்களையோ, குதிரைகளையோ அவர் நம்பவில்லை. அவைகளைக் குறித்து, அவர் மேன்மை பாராட்டவுமில்லை. தாவீதுக்கு அந்த கன்மலை, "அடைக்கலத்தின் மேன்மை" இன்னதென்று தெரிந்திருந்தது. அவர் சொல்லுகிறார், "தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடாரமறை விலே ஒளித்து வைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்" (சங்.27:5).

தேவபிள்ளைகளே, அநாதி தேவன் தம்முடைய மகிமையான செட்டையை உங்கள்மேல் விரித்தவராய், உங்களை மூடி அரவணைத்திருக்கிறதை உங்கள் விசுவாசக் கண்களினால் காண்பீர்களாக! அவருடைய பிரகாசமான நித்திய புயங்களில் அவர் உங்களை ஏந்தியிருக்கிறார். யார், உங்களை அவருடைய கரத்திலிருந்து பறித்துக் கொள்ளக்கூடும்?

சாலொமோன் சொல்லுகிறார், "கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திட நம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்" (நீதி. 14:26). நோவாவுக்கும், அவனுடைய பிள்ளைகளுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்த அநாதி தேவன் நிச்சயமாகவே உங்களுக்கும், தலைமுறை தலைமுறையாக உங்களுடைய சந்ததிக்கும் அடைக்கலமும், ஆதரவும் தந்தருளுவார். ஆம், அநாதி தேவனே உங்களுக்கு அடைக்கலம்!

நினைவிற்கு:- "கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்" (ஏசா. 25:4).