பதில் கொடுக்கிறவர்!

"அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" (லூக். 18:7).

நம் தேவன் பதில் கொடுக்கும் தேவன். அவர் ஜெபத்தைக் கேட்கிறவர் மாத்திரமல்ல, ஜெபத்திற்கு உத்தரவு அருளுகிற தேவனாகவுமிருக்கிறார். சங்கீதக்காரன் மகிழ்ச்சியோடு சொல்லுகிறார், "நான் கூப்பிட்ட நாளிலே, எனக்கு மறுஉத்தரவு அருளினீர்" (சங். 138:3).

சோர்ந்துபோகாமல், மறுஉத்தரவைப் பெறுகிற வரையிலும், நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்பதற்காக, இயேசு ஒரு உவமையைச் சொன்னார். லூக்கா 18-ம் அதிகாரத்தில், ஒரு விதவை போய், நியாயாதிபதியினிடத்தில் நியாயம் கேட்ட சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, சிலர் என்ன நினைக்கிறார்கள்? ஆண்டவர் எளிதாக பதில் கொடுக்கமாட்டார். மவுன சாமியார்போல அமர்ந்திருப்பார். அவர் பதில் கொடுக்கிற வரையிலும், அவரை விடவேக்கூடாது. சும்மா போய், அலட்டிக் கொண்டேயிருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

உங்களுடைய விசுவாசம் என்ன? கர்த்தர் "ஜெபத்தைக் கேட்கிறவர்" என்பது. அதுதான் விசுவாச ஜெபம். ஒருமுறை நீங்கள் ஜெபித்தாலே, ஆண்டவர் அதைக் கேட்டு விடுகிறார். அதன் பின்பு, கர்த்தர் பதில் கொடுத்து விட்டார் என்று நீங்கள் விசுவாசித்து, சந்தோஷமாய் அவருக்கு ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டிருந்தால் போதும். கர்த்தர், நிச்சயமாகவே அதற்குப் பதில் தருவார்.

கர்த்தர் சொன்ன உவமையில், ஒரு விதவை போய், நியாயாதிபதியிடம் ஒவ்வொரு நாளும் கேட்கிறாள். அவனோ, தேவனுக்குப் பயப்படாதவனும், மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். இந்த நியாயாதிபதி, ஆண்டவருக்கு இணையானவனல்ல. "நியாயாதிபதி" ஆண்டவருக்கு ஒப்பிடப்படவில்லை. இது, எதிர்மறை யாய் சொல்லப்படுகிற ஒரு உவமை. அந்த நியாயாதிபதிக்கு நியாயஞ்செய்ய, வெகு நாட்கள் வரைக்கும் மனதில்லாமலிருந்தது. ஏன் அவன் நியாயஞ்செய்தான்? இந்த விதவை, எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து அலட்டாதபடி, நியாயஞ்செய்ய வேண்டுமென்று, தனக்குள்ளே சொல்லிக்கொண்டு நியாயம் செய்தான்.

உங்களுக்கும், கர்த்தருக்குமிடையேயுள்ள உறவு, நியாயாதிபதிக்கும் விதவைக்கு மிடையேயுள்ள உறவு அல்ல. அது பிள்ளைக்கும், தகப்பனுக்குமிடையேயுள்ள இனிய உறவு. நீங்கள், எந்த நேரத்திலும் அவரிடத்தில் செல்ல முடியும். நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும், கிருபாசனத்தண்டை தைரியமாய் கிட்டிச் சேர முடியும். ஏனென்றால், நீங்கள் ராஜாதி ராஜாவினுடைய பிள்ளைகள். ஒரு விதவை, தேவபக்தியில்லாத ஒரு நியாயாதிபதியினிடத்தில் நியாயம் பெற்றுக் கொள்வான் என்றால், உங்கள்மேல் கரிசனையுள்ள பரம பிதாவினிடத்தில் நீங்கள் பதில் பெற்றுக் கொள்வது, எத்தனை உண்மையான காரியம்! கர்த்தர், உங்களுக்கு நிச்சயமாகவே பதிலளிப்பார்.

"நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்; இதோ, இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச் சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி விடுவாய்" (ஏசாயா 58:9).

நினைவிற்கு:- "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (எரே. 33:3).