அழைக்கிறவர்!

"இல்லாதவைகளை இருக்கிறவவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்" (ரோமர் 4:17).

இல்லாதவைகளை இருக்கிறவைகள்போல் அழைக்கிறது, "விசுவாசம்." இல்லாமையிலிருந்து, இல்லாதவைகளை உருவாக்குவது சிருஷ்டிப்பு. நம் தேவன், இல்லாதவைகளை இருக்கிறவை களைப்போல் அழைக்கிற தேவனாகிய கர்த்தராய் இருக்கிறார். அல்லேலூயா!

ஒருமுறை, மைக்கேல் ஆஞ்சலோ என்ற சிற்பி, தன் நண்பர்களுடன் அடர்ந்த காட்டின் வழியாக நடந்து சென்றார். எதிரிலே, ஒரு கரிய பாறை ஒன்று இருந்தது. அதைப் பார்த்தவுடன், மைக்கேல் ஆஞ்சலோ தன் நண்பரைப் பார்த்து, "அந்த தேவதூதனைப் பார். எத்தனை அழகாக இருக்கிறது!" என்றார். அந்த நண்பன், அந்த பாறையை மேலும், கீழுமாக ஏற இறங்க கூர்ந்து பார்த்தான். எந்த தேவதூதனையும் அங்கே காண முடியவில்லை. சற்று நேரத்திற்கு பின்பு, அந்த நண்பன் ஓவு எடுக்க சென்ற வேளையில், மைக்கேல் ஆஞ்சலோ நேராக அந்த பாறையிடம் சென்று, தன் உளியினாலும், சுத்தியினாலும், ஒரு அருமையான தேவதூதனை செதுக்கி விட்டார்.

ஓவெடுத்துவிட்டு வந்த நண்பன், இப்போது அந்த பாறையைப் பார்த்தபோது, அது அழகான தேவதூதனாய் நிற்கக் கண்டு பிரமித்துப் போனார். பாருங்கள்! ஒரு சிற்பியினால், வெறும் பாறையை தேவதூதனைப் போல காண முடிகிறது. ஒரு தச்சனால், வெறும் மரக்கட்டையை அழகான மேசை, நாற்காலியாக காணமுடிகிறது. அதுபோலவே, கர்த்தர் வெறுமையையும், இருளையும், அழகிய உலகமாக கண்டார். இல்லாதவைகளை, இருக்கிறவைகளைப் போல கண்ட தேவன், அவைகளிலிருந்து உலகங்களை உருவாக்க வல்லமை யுள்ளவராகவும் இருந்தார்.

ஒருநாள், கர்த்தருடைய கண்கள் ஆபிரகாமைப் பார்த்தது. குழந்தையில்லாமல் வெறுமையாயிருந்த அவனை, கர்த்தர் ஜாதிகளின் தகப்பனாக, விசுவாச சந்ததியின் பிதாவாக கண்டார். அப்படியே, ஆபிரகாமை ஆசீர்வதிக்கவும் வல்லமையுள்ள வராயிருந்தார். உங்களுடைய வெறுமை, பற்றாக்குறை, கடன் தொல்லையின் மத்தியிலே, அவர் உங்களை ஐசுவரிய சம்பன்னர்களாக, ஆசீர்வாதமான பாத்திரங்களாகக் காண்கிறார். அப்படியே, உங்களை ஆசீர்வதிக்க அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிற தேவன், அன்றைக்கு மரித்த லாசருவை ஜீவனுள்ளவனைப் போல அழைத்தார். அவன், மரித்து நான்கு நாட்களாகிவிட்டது. அவனுடைய சரீரமெல்லாம் அழுகி நாறுகிறது. அவனுடைய செவிகள், கேட்கும் திறனற்றுப் போனது. ஆனால், கர்த்தரோ அவனை மரித்தவன் போல எண்ணாமல், ஜீவனோடிருக் கிறவனைப் போல அழைத்தார்.

தேவபிள்ளைகளே, உங்கள் தேவன் வெறுமையிலே உலகத்தைக் கண்டது எவ்வளவு உண்மையோ, இல்லாதவைகளிலிருந்து சூரியனையும், சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையாய் உங்களை பரிசுத்தவான்களாக, நீதிமான்களாக, சுத்திகரிக்கப்பட்டவர்களாக, பரலோகத்திற்குப் பாத்திரவான்களாகக் காண்கிறார். அந்த தேவன், உங்களுடைய எல்லா வெறுமையிலிருந்தும், சம்பூரணத்தை கட்டளையிட வல்லமையுள்ளவர் என்பதை மறந்து போகாதேயுங்கள்.

நினைவிற்கு:- "அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார்" (யோபு 26:7).