நம்பிக்கையானவர்!

"பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக" (ரோமர் 15:13).

நம் தேவன் நம்பிக்கையின் தேவன்! நம்பிக்கையை உங்களில் பெருகச் செய்கிறவர். கர்த்தர் பேரில் உங்கள் நம்பிக்கையை வைப்பீர்களென்றால், உங்கள் எதிர்காலம் துளிர்விட்டு மலரும். அநேகர் தங்கள் நம்பிக்கையை, உலகப்பிரகாரமான காரியங்களில் வைத்திருக்கிறார்கள். பணத்திலும், பதவியிலும், அதிகாரத்திலும் நம்பிக்கை வைத்து, அதில் மகிழ்ச்சியடைய நினைக்கிறார்கள். ஆனால், அது நிரந்தரமானதல்ல என்பதை அறியாதிருக்கிறார்கள்.

தாவீது சொல்லுகிறார், "இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை" (சங். 39:7). "என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்" (சங். 25:2)." தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்" (சங். 55:23). தாவீது, ஒரேயொரு காரியத்தை மாத்திரம் வலியுறுத்துகிறார். என் நம்பிக்கையை, கர்த்தர்மேல் வைத்திருக்கிறேன். அவரே, நம்பிக்கையின் தேவன்.

"நம்பிக்கை" கப்பல் கடலில் நிற்கப்போடும் நங்கூரத்திற்கு ஒப்பிடப்பட் டிருக்கிறது. எபிரெய ஆக்கியோன் சொல்லுகிறார்: "அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது" (எபி. 6:19). நங்கூரம் இல்லாமல் கப்பல் இருக்குமென்றால், கடல் கொந்தளிக்கும்போது, அலசடிப்பட்டு மூழ்கிப்போவிடும். ஆனால் நங்கூரமானது, உறுதியான பாறையின் மேல் போடப்பட்டிருக்குமென்றால், எவ்வளவுதான் புயல் வீசினாலும், கடல் கொந்தளித்தாலும், நங்கூரத்தின் பலத்தினால் கப்பல் பாதுகாக்கப்படும்.

தேவபிள்ளைகளே, சோதனைகளும், போராட்டங்களும் உங்கள் வாழ்க்கையில் மோதியடிக்கும்போது, கர்த்தர்மேல் வைத்திருக்கிற நம்பிக்கை உங்களுக்கு நல்ல நங்கூரமாகும். அப்பொழுது தாவீதோடு சேர்ந்து, தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன். நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? என்று சொல்ல முடியும் (சங். 56:4).

இன்றைக்கு உங்களுடைய தீர்மானம் என்ன? உங்களுடைய நம்பிக்கையை கர்த்தர் பேரில் வைக்கிறீர்களா? அல்லது உங்களுடைய நம்பிக்கையை உலக மனிதர்கள் மேல் வைக்கிறீர்களா? சிலர் மந்திரிகள்மேல், அதிகாரிகள்மேல், டாக்டர்கள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் மனிதர்கள்மேல் வைக்கும் நம்பிக்கை வீணாகிப் போய்விடும்.

வேதம் சொல்லுகிறது, "நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டு விடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்" (ஏசா. 2:22). ஆகவே, உங்கள் நம்பிக்கையை கர்த்தர்மேல் வைத்து, அவரையே சார்ந்து கொள்ளுங்கள். "உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் தேவன் மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்" (1 பேதுரு 1:21).

நினைவிற்கு:- "கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்" (நீதி. 14:26).