வாக்குப்பண்ணினவர்!

"தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே" (2 கொரி. 1:20).

நம்முடைய தேவன் வாக்குத்தத்தங்களின் தேவன். தாம் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற உண்மையுள்ளவர். அவருடைய வாக்குத்தத்தங்களெல்லாம், கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. வேதாகமத்தை, "வாக்குத்தத்தங்களின் புத்தகம்" என்று சொல்லலாம். ஒரு பக்தன் வேதத்தை வாசித்து விட்டு, அதில் ஏறக்குறைய முப்பதாயிரம் வாக்குத்தத்தங்களிருப்பதாக கணக்கிட் டிருக்கிறார். எத்தனை ஆயிரம் வாக்குத்தத்தங்களிருந்தாலும், அத்தனையையும் நிறைவேற்றுவதற்கு, தேவன் வல்லவராயிருக்கிறார்.

கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, ஏராளமான வாக்குத்தத்தங்களை ஆபிரகாமுக்குக் கொடுத்தார். "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" என்றார் (ஆதி. 12:2). நீங்கள் இன்றைக்கு ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்து, கர்த்தர் ஆபிரகாமுக்கு சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவதைப் பார்த்து களிகூருகிறது மாத்திரமல்ல, நீங்களும் அந்த வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி ஏற்றுக்கொள்வீர்களாக!

வாக்குத்தத்தமானது, ஆபிரகாமுக்கு மாத்திரமல்ல, அவருடைய பிள்ளைகளுக்கும் தலைமுறை தலைமுறையாய் உண்டாயிருக்கிறது என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது. நீங்கள் ஆபிரகாமின் ஆவிக்குரிய பிள்ளைகளாயிருக்கிறது மாத்திரமல்ல, ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களையும் சுதந்தரித்துக் கொள்ளுகிறீர்கள். ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வாக்குத்தத்தங்களையும் சுதந்தரித்துக் கொள்ளுகிறீர்கள். பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்ட உங்களுக்கு பூரண சுதந்திரமுண்டு.

ஆபிரகாம், தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக் கொண்டபடியினால்தான், தன் மகனை அவர் பலியிடச் சொன்னபோதும், கொஞ்சமும் அதைரியப்பட்டுக் கலங்காமல், கர்த்தருடைய வாக்குத்தத்தத்தையே பற்றிக் கொண்டார். "வானத்தின் நட்சத்திரங்களைப்போல் உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்" என்று சொன்னவர், கடற்கரை மணலத்தனையாய் விருத்தியாக்குவேன் என்று உடன்படிக்கை செய்த ஆண்டவர், நிச்சயமாகவே தன்னுடைய மகனை தன்னைவிட்டு பிரிக்கமாட்டார் என்பதில் பூரண விசுவாசம் கொண்டிருந்தார். வேதம் சொல்லுகிறது, "தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவர் அவிசுவாசமாச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக் கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்" (ரோம. 4:20,21).

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருப்பாரென்றால், அதை உறுதியாய் பிடித்துக்கொள்ளுங்கள். மனம் கலங்காதேயுங்கள். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் ஒழிந்து போவதில்லை. உங்களுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறை வேற்றியே தீருவார். நீங்கள் "வாக்குத்தத்தத்தின் சந்ததியார்" என்பதைக் குறித்து மேன்மைப் பாராட்டி, ஆண்டவரை நன்றியோடு ஸ்தோத்தரியுங்கள்.

நினைவிற்கு:- "அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக் கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே" (ரோமர் 9:4).