வாசம்பண்ணுகிறவர்!

"நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" (2 கொரி. 6:16).

தேவன் உங்களுக்குள் வாசம்பண்ணுகிறவர். உங்களோடு உலாவுகிறவர். "நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனங்களாயிருப்பீர்கள்" என்று உடன்படிக்கைச் செய்திருக்கிறவர்! உங்களோடு நடப்பது தேவனுக்கு அவ்வளவு பிரியம். நீங்கள் தேவனோடு நடக்க வாஞ்சிப்பதைப் பார்க்கிலும், அவர் உங்க ளோடுகூட நடக்க அதிக வாஞ்சையுள்ளவராயிருக்கிறார். ஆகவேதான், பகலின் குளிர்ச்சியான வேளையில் மனிதனைத் தேடி வந்து, ஏதேன் தோட்டத்திலே உலாவினார். "இயேசு" என்ற பெயரில் மனிதனாய் இந்த உலகத்திற்கு இறங்கி வந்தார். சீஷர்களோடு நடந்தார், படகிலே பிரயாணம் செய்தார், ஒன்றாய் உண்டு உறங்கினார்.

கிறிஸ்மஸ் நாட்களிலே, சொந்தக்காரர்களெல்லாம் வீட்டுக்கு வருவார்கள். அருமையான நண்பர்கள் வருவார்கள். அவர்களையெல்லாம் பார்க்கும்போது, உங்களுடைய உள்ளம் பரவசமடைகிறது. அப்படியானால், உங்களைச் சிருஷ்டித்த ஆண்டவரோடு உலாவுவது, உங்களுக்கு எத்தனை அதிக மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்!

ஏனோக்கு, தன் வாழ்நாளெல்லாம் கர்த்தரோடு சஞ்சரிக்கத் தீர்மானித்தார். ஏறக்குறைய முந்நூறு வருஷங்கள், தேவனோடுகூட சஞ்சரித்துக் கொண்டிருந்து, தேவனோடு கூட என்றென்றும் வாழச் சென்றார் என்று, ஆதி 5:22-24-லே வாசிக்கிறோம். நோவா தேவனோடு சஞ்சரித்தார் (ஆதி. 6:9). தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டார் (யாக். 2:23). மோசேயினிடத்திலே, ஒரு சிநேகிதனோடு இன்னொரு சிநேகிதன் பேசுவதைப் போல் தேவன் முகமுகமாப் பேசினார் (யாத். 33:11). தேவபிள்ளைகளே, அதே ஆண்டவர் உங்களோடுகூட பேசவும், உலாவவும் மனதார விரும்புகிறார்.

நீங்கள் தேவனோடு உலாவ வேண்டுமென்றால், தேவன் உங்களோடு வாசம் பண்ண வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? "இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?" என்று வேதம் கேட்கிறது (ஆமோஸ் 3:3). கிறிஸ்துவோடுகூட ஒருமனமாகி விடுங்கள். எப்போதும் அவரைப் பிரியப்படுத்துங்கள். "என்ன செய்தால், அவருக்குப் பிரியமாயிருக்கும்?" என்று எண்ணி, அவருக்குச் சித்தமானதைச் செய்ய உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள்.

பாருங்கள், யோனத்தான் தாவீதை உயிரைப்போலச் சிநேகித்தான். அவர்களுடைய இருதயம் ஒன்றாயிருந்தது (1 சாமு. 18:1). அதைப்போல, நீங்கள் இயேசுவை நேசிக்கும்போது உங்களுடைய ஆவியும், தேவனுடைய ஆவியும் ஒன்றாய் இணைந்து விடுகிறது (1 கொரி. 6:17). ஆம், கிறிஸ்து உங்களுக்குள்ளே வாசஞ் செய்கிறவர்! "இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது. அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்" (வெளி. 21:3).

நினைவிற்கு:- "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்சேடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக் கனி கொடுக்க மாட்டாது" (யோவான் 15:4).