அன்புள்ளவர்!

"தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவா. 4:8).

தேவன் அன்பாகவேயிருக்கிறார். அவர் தன்னுடைய அன்பில் மாறுவதில்லை. உங்கள்மேல் அவர் எவ்வளவு அன்பு வைத்தார். இன்றைக்கும் அவர் அன்புள்ளவராகவேயிருக்கிறார். அன்பு, அன்பை எதிர்ப்பார்க்கிறது. அன்புள்ள தேவன் உங்களுடைய அன்புக்காக ஏங்குகிறவராயிருக்கிறார்! அன்பான கர்த்தர், மனிதனை சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டித்தபோது, அவனுக்கும் தமது அன்பின் சுபாவத்தைக் கொடுத்தார்.

அந்த அன்பினால், ஒருவரையொருவர் நேசிக்க முடிகிறது. சமாதானமாய் வாழ முடிகிறது. இணைந்து குடும்பமாய் ஜீவிக்க முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கர்த்தரை அளவில்லாமல் நேசிக்க முடிகிறது! கிறிஸ்தவ மார்க்கமே, ஒரு அன்பின் மார்க்கம்தான். சபைகளும், சமுதாயமும் திருத்த முடியாத மக்களை, அந்த அன்பின் சுவிசேஷம் மாற்றியமைக்கிறது. இந்த அன்பின் மார்க்கம், நீங்கள் அன்பில் வளரவும், அன்பில் பூரணப்படவும் உங்களுக்கு வழி செய்கிறது. பசிபிக் சமுத்திரத்தில் ‘பிஜி’ என்ற ஒரு தீவுண்டு. ஒரு காலத்தில் அங்குள்ள மக்கள் நர மாம்ச பட்சினிகளாய் வாழ்ந்தார்கள். மனிதரை மனிதர் சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கிருந்தது. வெள்ளைக்கார மிஷனெரிகள் அன்பின் சுவிசேஷத்தை அங்கு சுமந்து சென்றால், உடனே அவர்களைப் பிடித்து சாப்பிட்டு விடுவார்கள். அங்கு, ஒரு ஜாதிக்கும் இன்னொரு ஜாதிக்கும் சண்டை ஏற்படுமென்றால், சண்டையில் மரிப்பவர்களையெல்லாம் இழுத்துக்கொண்டு வந்து, சமைத்து சாப்பிட்டு விடுவது அவர்கள் வழக்கம்.

"அன்பு" என்றால் என்னவென்று தெரியாத அந்த மக்களுக்கு, சுவிசேஷம் சென்றபோது கிறிஸ்துவின் அன்பு அவர்களை முற்றிலும் மாற்றியமைத்தது. மனிதரைக் கொல்லும் பழக்கத்தை, அவர்களை சாப்பிடும் பழக்கத்தை விட்டு விட்டார்கள். இப்பொழுது கிறிஸ்துவின் அன்பினால் நிரம்பி மற்றவர்களை நேசிக்கிறவர்களாயிருக்கிறார்கள். கல்வாரியின் அன்பினால் உருகாத உள்ளமும் உண்டோ?

தேவ அன்பு உங்களுடைய இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிற படியால், எப்படிப்பட்ட கொடூரமான மக்களையும் நேசிக்க உங்களால் முடியும். சத்துருக்களுக்காக ஜெபம் பண்ணவும், சத்துரு பசியாய் இருந்தால் அவர்களுக்குப் போஜனம் கொடுக்கவும் அந்த அன்பு உங்களில் கிரியை செய்கிறது. தேவபிள்ளைகளே, இந்த தெய்வீக அன்பு எப்பொழுதும் உங்களில் நிரம்பியிருக்கட்டும்! கர்த்தருடைய அன்பின் சீஷனாக விளங்குவீர்களா?

புதிய ஏற்பாட்டிலே, கர்த்தர் இரண்டு வகையான கட்டளைகளைக் கொடுத்தார். முதல் கட்டளை, தேவனிடத்தில் முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்புகூர வேண்டுமென்கிற கட்டளை. இரண்டாவது கட்டளை, உங்களிடத்தில் நீங்கள் அன்புகூருகிறதுபோல, உங்களுடைய சகோதரர்களிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற கட்டளை. இதை பிரதானக் கட்டளையாக கர்த்தர் வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். "நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று இயேசு சொன்னார் (யோவா. 13:34).

நினைவிற்கு:- "தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை" (1 யோவான் 2:10).