சமாதானமானவர்!

"கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்" (நியா. 6:24).

"யெகோவா ஷாலோம்" என்றால் "தேவன் என்னுடைய சமாதானமானவர்" என்று அர்த்தம். உலகம், சமாதானத்திற்காக ஏங்குகிறது. ஒவ்வொரு மனுஷனும், சமாதானமாய் வாழும்படி முயற்சிக்கிறான். ஆனால், தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கோ, சமாதானம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. நம் அருமை ஆண்டவரே, உங்களுக்கு சமாதானத்தின் தேவனாயிருக்கிறார் (ரோமர் 15:33; 2 கொரி.13:11). தேவ சமாதானமானது, பரலோகத்திலிருந்து உங்களை நோக்கி இறங்கி வருகிறது. கர்த்தர், தம்முடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறார். அதற்காகவே இயேசுகிறிஸ்து, இந்த உலகத்தில் வந்தார். அவருடைய பெயர்களில் ஒன்று, "சமாதானப் பிரபு" என்பதாகும் (ஏசா. 9:6).

ஒருமுறை பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடத்தில் வந்தார்கள். "ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும்" என்று கதறினார்கள். அவர்களுடைய நிலைமையை பார்த்தவுடனே, கிறிஸ்துவினுடைய உள்ளம் உருகினது. உடனே, அந்த பத்துபேருக்கும் தெய்வீக சுகத்தை வாக்களித்து, "நீங்கள் போய், உங்களுடைய ஆசாரியர்களுக்கு காண்பியுங்கள்" என்று சொன்னார். அவர்கள் போகிற வழியில்தானே, அவர்களுடைய சரீரம் முழுவதும் அற்புதமாய் சுகமடைந்தது. அவர்களில் ஒருவன் இயேசுவினிடத்திலே நன்றி செலுத்த வந்தான்.

ஆண்டவர் அவனைப் பார்த்து, "நீ சமாதானத்தோடே போ. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார். கர்த்தர் உங்களுக்கு சரீர சுகத்தை மாத்திரமல்ல, இரட்சிப்பை மாத்திரமல்ல, சமாதானத்தையும் தருகிற வராயிருக்கிறார். ஆகவே, அவர் உங்களைப் பார்த்து, "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று அழைக்கிறார் (மத். 11:28). "இளைப்பாறுதல்" என்பது "சமாதானம்" தானே!

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தை விட்டு கடந்து சேல்ல வேண்டிய நேரம் வந்தபோது, சீஷர்களுடைய உள்ளம் தவித்தது. அவர்கள் சதுசேயரையும், பரிசேயரையும் எண்ணி கலங்கினார்கள். ஓநாய்களைப் போல, பட்சிக்கிற மனுஷர்களை நினைத்து பயந்தார்கள். கிறிஸ்து தங்களை விட்டு போய்விட்டால், என்ன செய்வது? என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்து அவர்களை அன்போடுகூட தேற்றி, "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக" என்று சொன்னார் (யோவான் 14:27).

மாத்திரமல்ல, இயேசு சிலுவை பாடுகளுக்கு பிறகு உயிரோடு எழுந்து, சீஷர்களைப் பார்த்து, "உங்களுக்குச் சமாதானம்" என்று சொல்லி வாழ்த்தினார் (யோவான் 20:19). தேவபிள்ளைகளே, சமாதானத்தைக் கொண்டுவரக்கூடியவர் இயேசுகிறிஸ்து ஒருவர் மாத்திரமே. இன்றைக்கு அந்த சமாதான பிரபுவை, உங்கள் தேவனாக ஏற்றுக்கொள்வீர்களா?

நினைவிற்கு:- "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்" (யோவான் 16:33).